‘‘கரன்சியை கண்ணில் காட்டுனாதான் குவாரி பர்மிட் மற்றும் லைசென்ஸ் என ஜோரா கல்லா கட்டுகிறாராமே கனிமவளத்துறை அதிகாரி..’’ எனக்கேட்டபடியே வந்தார் பீட்டர் மாமா.
‘‘மான்செஸ்டர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், கனிம வளத்துறை உயரதிகாரி அலுவலகம் இயங்குகிறது.. இங்கு பணிபுரிந்த உயரதிகாரி மீது தொடர்ச்சியாக பல்வேறு புகார்கள் எழுந்ததால் அவர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார். தற்போது, புதிதாக எட்டு எழுத்து பெயர் கொண்ட ஒரு அதிகாரி வந்துள்ளார். இவரும், கரன்சி குவிப்பதில் குறியாக இருக்கிறாராம்.. தடையின்மை சான்று மற்றும் கல்குவாரி நடத்துவதற்கு பர்மிஷன், லைசென்ஸ், மனையிட அப்ரூவல் தடையின்மை சான்று போன்ற பணிகளுக்கு யாரேனும் விண்ணப்பம் கொடுத்தால், அவ்வளவு எளிதாக பைல் நகர்த்துவது இல்லையாம்.. கரன்சியை கண்ணுல காட்டினால்தான் பைல் நகருதாம்.. கரன்சி கொடுக்காத நபர்களின் விண்ணப்பம் பல மாதங்களாக அங்கேயே தூங்குகிறதாம்.. கட்டுக்கட்டாக கரன்சி காட்டினால் மட்டுமே காரியம் நடக்குதாம்.. இல்லையேல் இழுபறிதான். தொடர்ந்து கால தாமதம் செய்வதால், ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள், கல் குவாரி கான்டிராக்டர்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் ரொம்பவே கடுப்பில் இருக்கிறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மாளிகைக்கு தொடர்ந்து வந்த பாம் மிரட்டல் இப்போதெல்லாம் காமெடியாகி வருகிறதாமே தெரியுமா..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘சுற்றுலாவுக்கு பெயர்போன புதுச்சேரியில் பவர்புல் மாநில நிர்வாகிக்கு தனியாக மாளிகை இருக்கிறதாம்.. கடந்த ஒரு மாதத்திற்குள் அடுத்தடுத்து பாம் மிரட்டல்களாம்.. இதனால் மாளிகையை பாதுகாக்கும் காக்கிகள், எல்லையை கவனிக்கும் அதிகாரிகள் டென்ஷனில் உள்ளார்களாம்.. இதற்கு 6, 7 முறை வந்த தொடர் மிரட்டல்களின்போது அங்குலம் அங்குலமாக பாம் நிபுணர் குழு அலசியபோது ஏமாற்றம் மிஞ்சியதே முக்கிய காரணமாம்.. சித்து விளையாட்டில் ஈடுபடும் புள்ளியை கண்டுபிடிக்க முடியாமல் ெதாடர்ந்து திணறி வருகிறார்களாம்.. இந்த விவகாரம் உள்ளூர் மக்களிடத்திலும் தற்போது காமெடி பொருளாகி இருக்கு.. அதாவது சிறுத்தை படத்தில் வரும் நடிகர் சந்தானம் காமெடியை மாளிகையுடன் ஒப்பிட்டு சமூக வலைதளத்தில் வீடியோ பரப்பி சிரிச்சிட்டு வர்றாங்களாம்.. நெட்டிசன்களும் கலாய்க்கிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மலைக்கோட்டையில் மன உளைச்சலுக்கு ஆளான லேடீஸ் ஜெயில் அதிகாரிக்கு ஜூம் மீட்டிங் முடிந்த கையோடு டிரான்ஸ்பர் ஆர்டர் மின்னல் வேகத்தில் போயிருக்காமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘ஜெயில் டிபார்ட்மெண்டில் இருக்கும் உச்சஅதிகாரி ஒருவர், வாரத்திற்கு ஒருநாள் ஜூம் மீட்டிங் நடத்துவாராம்.. அந்தந்த சென்டிரல் ஜெயில் எஸ்.பி.,க்கள், டிஐஜிக்கள் அந்தந்த மீட்டிங்கில் இணைவார்களாம்.. ஆனால் கூட்டம் தொடங்கியது, முடிந்தது என்றில்லாமல் பல மணி நேரம் நடக்குமாம்.. இதன்படி சமீபத்தில் சென்னையில் இருக்கும் அந்த உச்ச அதிகாரி, ஜூம் மீட்டிங்கை கூட்டியிருக்காரு.. பல்வேறு ஊழல், மோசடி விவகாரங்களை கேட்டுக்கிட்டே வந்தாராம்.. அப்போது திடீரென மலைக்கோட்டை லேடீஸ் ஜெயில் உயரதிகாரிக்கு மனஉளைச்சல் ஏற்பட்டது எப்படின்னு ஒரு கொஸ்டீனை கேட்டிருக்காரு.. இதனை சற்றும் எதிர்பாராத அந்த அதிகாரி, பிரிசன் பஜாரில் சின்ன அதிகாரி ஒருவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவரை ரெண்டு முறை அழைத்தேன், ஆனால் அவர் கொஞ்சம் கூட மதிக்காமல், சாப்பிட்டுக்கிட்டிருக்கேன் என அலட்சியமாக பதில் சொல்லிட்டாரு.. இது எனக்கு மட்டுமல்ல.. அங்கிருந்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது என நடந்தவற்றை விலாவரியாக சொன்னாராம்.. இதற்கு யார் கொடுக்கும் தைரியம் என்பதும் எனக்கு தெரியும் என கேட்ட அந்த உச்சஅதிகாரி, என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பதை நீங்களே சொல்லுங்கன்னு கேட்டிருக்காரு.. இடைநீக்கம் செய்தால் எதிர்காலங்களில் இதுபோன்ற தவறுகள் நடக்காதுன்னு லேடி அதிகாரி சொல்லியிருக்காங்க.. ஜூம் மீட்டிங் முடிந்ததும் அந்த சின்ன லேடி அதிகாரிக்கு டிரான்ஸ்பர் ஆர்டர் மின்னல் வேகத்தில் சென்னையிலேருந்து போயிருக்கு.. இதனால அந்த அந்த சின்ன அதிகாரிக்கு பின்புலமா இருப்பவருக்கும் நடுக்கம் வந்திருப்பதாக ஜெயில் ஆபீசர்ஸ் சொல்றாங்க..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ஆரம்பம் முதல் பலாப்பழக்காரர் கூடவே பயணித்து வந்த முக்கிய பிரமுகர்கள் ஒருத்தர் மாத்தி ஒருத்தர் புலம்பித் தவிக்கிறாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘ஹனிபீ மாவட்டத்தின் பிக்பாண்ட் நகரம் தான் பலாப்பழக்காரரின் சொந்த ஊர். இலைக்கட்சியில் இருந்தபோது, சேலத்துக்காரரால் பிளவு ஏற்பட்டு தனி அணியாக வந்தபோது, ஹனிபீ மாவட்டம் மட்டுமின்றி, பிற மாவட்டங்களை சேர்ந்த ஒரு குறிப்பிட்ட பகுதியினர் பலாப்பழக்காரரை ஆதரித்து அவரது பின்னால் வந்தாங்க.. ஆனால், அரசியலில் காலம் போக போக பலாப்பழக்காரரின் நடவடிக்கையில் உடன்பாடு இல்லாமல், பெரும்பாலானோர் சேலத்துக்காரரின் பக்கம் தாவிட்டாங்க.. இப்போது விரல் விட்டு எண்ணும் வகையில் ஒரு சிலர் மட்டுமே பலாப்பழக்காரர் பின்னாடி இருக்கிறாங்க.. அவங்களும் இப்போது புலம்பும் மன நிலைக்கு வந்துவிட்டாங்களாம்.. பிக்பாண்ட் நகரைச் சேர்ந்த நிறத்தை பெயரின் முன்னால் கொண்ட முக்கிய பிரமுகர், ஆரம்பம் முதல் பலாப்பழக்காரருடன் பயணித்து வருகிறார்.. இவர்தான் பலாப்பழக்காரர் தொடர்பான வழக்குகளில் பெரிதும் உதவினாராம்.. இவரது வீட்டில் கடந்த வாரம் ஒரு துக்க நிகழ்வு நடந்திருக்கு.. அப்போது பலாப்பழக்காரர் உள்ளூரில் இருந்தும் கூட அவருக்கு ஆறுதல் கூற செல்லவில்லையாம்.. இதனால் நிறத்துக்காரர் பெரிதும் விரக்தி அடைஞ்சிட்டாராம்.. ‘அவருக்கு எவ்வளவோ பண்ணியிருக்கேன்… எனக்கு ஆறுதல் சொல்ல வரலையே…’ என தன்னை சந்திப்பவர்களிடத்தில் சொல்லி சொல்லி புலம்பித் தவித்து வருகிறாராம்.. ‘உங்களுக்கு மட்டுமா? எங்களுக்கும் இதே நிலைதான்.. நம்பி வந்தோம். வெம்பி நிற்கிறோம்’ என தங்கள் பங்குக்கு அவர்களும் புலம்பிச் சென்றார்களாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.