புதுடெல்லி: பாஜவின் தேசிய தலைவராக 3 ஒன்றிய அமைச்சர்களில் ஒருவர் தேர்வு செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. பாஜவின் தற்போதைய தேசிய தலைவராக இருப்பவர் ஜேபி நட்டா. கடந்த 2020ம் ஆண்டு இந்த பதவிக்கு அவர் நியமிக்கப்பட்டார். இந்த பதவிக்காலம் ஏற்கனவே முடிந்த நிலையில், கடந்த மக்களவை தேர்தலுக்காக பதவி அவருக்கு நீட்டிப்பு செய்யப்பட்டது. மேலும், அந்த தேர்தலில் போட்டியிட்டு அவர் வெற்றிபெற்றதையடுத்து தற்போது ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரகாவும் இருந்து வருகிறார். இதனால், புதிய தேசிய தலைவரை தேர்வு செய்யும் பணிகளில் பாஜ இறங்கியது. ஆனால், பெஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலால் இந்த வேலை நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் வேகமெடுத்துள்ளன. உலகின் மிகப்பெரிய கட்சிகளில் ஒன்று, 21 மாநிலங்களில் அதிகாரத்தில் உள்ளது மற்றும் 600க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கிளைகளை வைத்திருக்கும் அந்த கட்சிக்கு யார் தலைவராக நியமிக்கபப்டுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அந்த கட்சியின் விதிப்படி மாநில அளவிலான அமைப்பு தேர்தலை நடத்தி முடித்த பிறகுதான் தேசிய தலைவருக்கான தேர்தலை நடத்த வேண்டும். அதன்படி, தற்போது பல மாநிலங்களில் அந்த தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. உத்தரபிரதேசத்தில் 70 மாவட்டங்களுக்கு தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் மாநில அளவிலான தேர்தல் நடைபெறவில்லை. அதேபோல், மத்தியப் பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட சில மாநிலங்களில் புதிய மாநிலத் தலைவர்கள் நியமிக்கப்படவில்லை. இதனை முடித்துவிட்டு தேசிய தலைவருக்கான தேர்தலை பாஜ நடத்தும் என்று கூறப்படுகிறது. இந்த தேர்தல் தொடர்பான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இந்த மாத இறுதியில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.
தேசிய தலைவராக இருந்து ஒன்றிய அமைச்சரானதால் நட்டாவிற்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாது என்று கூறப்படுகிறது. ஆனால், தற்போது ஒன்றிய அமைச்சர்களாக இருக்கும் 3 பேர் இந்த பதவிக்கான போட்டியில் உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, தர்மேந்திர பிரதான், சிவராஜ் சிங் சவுகான் மற்றும் மனோகர் லால் கட்டார் ஆகியோரில் ஒருவர் தேசிய தலைவராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஒடிசாவைச் சேர்ந்த முக்கிய ஓபிசி தலைவரான தர்மேந்திர பிரதான், கட்சி பணிகளில் அதிக ஈடுபாடு உடையவர். மேலும், தற்போதைய தேசிய தலைமைக்கு மிகவும் நெருக்கமாக இருந்து வருபவர். இந்த பதவிக்கான போட்டியில் இவர் முன்னிலையில் உள்ளார்.
மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இந்த ரேசில் உள்ளார். கட்சியை அடிமட்டத்தில் இருந்து வளர்த்தவர் என்ற பெருமையை கொண்டவர். மூத்த தலைவராகவும் இருந்து வருகிறார். அதேபோல், அரியானா முதல்வராக இருந்து ஒன்றிய அமைச்சரவைக்கு மாறிய மனோகர் லால் கட்டாரும் இந்த பதவிக்கான போட்டியில் உள்ளார். இந்த 3 ஒன்றிய அமைச்சர்களில் ஒருவர் தேசிய தலைவராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் உள்ள பல மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டு தேர்தல் வர உள்ளது. மேலும், 2029 மக்களவை தேர்தல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தேசிய தலைவர் நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.