ராமநாதபுரம்: ஆளுநர் மாளிகை பாஜ கட்சி அலுவலகமாக மாறி விட்டதாக, பசும்பொன்னில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் நேற்று நடந்த முத்துராமலிங்கத்தேவர் குருபூஜையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இந்திய விடுதலைக்காக போராடி 6 ஆண்டு காலம் சிறையில் இருந்தவர் பசும்பொன் திருமகனார். அவருடைய நினைவை போற்றும் வகையில், அவரை நாங்கள் வணங்கி இருக்கிறோம். அறிஞர் அண்ணா, தேவரை தெய்வீக திருமகனார் என அன்போடு அழைத்தார். 1963ம் ஆண்டு தேவர் மறைந்தபோது, அண்ணா, கலைஞர் இருவரும் நேரடியாக இங்கு வருகை தந்தனர். 1969ல் தேவர் நினைவிடம் வந்து அரசு சார்பில் புதுப்பிக்க கலைஞர் உத்தரவிட்டார்.
2007ல் நூற்றாண்டு விழாவில் பெருமை சேர்த்திட கலைஞர், ரூ.10 லட்சத்தில் அணையா விளக்குடன் நினைவிடத்தை புதுப்பித்தார். ரூ.9 லட்சத்தில் நூற்றாண்டு விழா நுழைவு தோரண வாயில், ரூ.9 லட்சத்தில் தேவர் புகைப்பட கண்காட்சி, ரூ.4 லட்சத்தில் நூலகம், ரூ.5 லட்சத்தில் பால்குட மண்டபம், ரூ.5 லட்சத்தில் முளைப்பாரி மண்டபம் என ரூ.2 கோடியே 5 லட்சத்துக்கான பல்வேறு திட்டங்களை அன்றைய முதல்வர் கலைஞர் கொடுத்தார். மறைந்த பி.மூக்கையா தேவர் முயற்சியால் மதுரை கோரிப்பாளையத்தில் அமைக்கப்பட்ட தேவர் சிலை திறப்பு விழாவை, அரசு விழாவாக்கி அன்றைய குடியரசுத் தலைவராக இருந்த வி.வி.கிரியை அழைத்து வந்து திறக்க கலைஞர் நடவடிக்கை எடுத்தார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் முத்துராமலிங்கத் தேவர் பெயரில் ரூ.25 லட்சத்தில் அறக்கட்டளை உருவாக்கினார் கலைஞர்.
இதேபோல, பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த பிரமுகர்கள் தங்களுடைய மக்களுடைய கல்வி மேம்பாட்டுக்காக கல்லூரி தொடங்க திட்டமிட்டனர். இதற்கு அனைத்துக்கும் அனுமதி வழங்கியவர் கலைஞர். இதில் கமுதி, மேலநீழிதநல்லூர், உசிலம்பட்டியில் தேவர் பெயரில் கல்லூரி அமைய காரணமாக கலைஞர் இருந்தார். இதில், 2021ல் மேலநீழிலநல்லூர் கல்லூரியை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டது திராவிட மாடல் அரசு. 1989ல் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் புது இட ஒதுக்கீடு உரிமையை உருவாக்கி, கல்வி, வேலை வாய்ப்புகளில் இந்த சமூக மக்கள் முன்னேற வாய்ப்புகளை கொடுத்தவரும் கலைஞர்தான்.
பல்வேறு திட்டங்கள் மூலம் தேவருக்கு சிறப்பு செய்தவர் கலைஞர். 2 நாட்களுக்கு முன்னால் கூட தமிழ்நாடு அரசின் சார்பில் மரியாதை செலுத்த வரும் பொதுமக்கள் நலன்கருதி ரூ.1.55 கோடியில் 2 மண்டபங்கள் அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. தேவர் வீரராக பிறந்தார். வீரராக வாழ்ந்தார், வீரராகவும் மறைந்தார் என பசும்பொன் தேவர் பற்றி கலைஞர் கூறுவார். இத்தகைய சிறப்புக்குரிய தேவருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வணக்கம் செலுத்தி, அவர் புகழ் வாழ்க என வாழ்த்துவோம். தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவது தொடர்கிறது.
தற்போது உடனடியாக ஒன்றிய அரசுக்கு கடிதம் அனுப்பியிருக்கிறோம். அண்மையில் கூட ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டிருக்கின்றனர். இதுகுறித்து வெளியுறவுதுறை அமைச்சருக்கு கடிதம் எழுதி இருக்கிறேன். திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலுவை, ராமநாதபுரம் மாவட்ட மீனவ சங்க பிரதிநிதிகளை அழைத்துக் கொண்டு, வெளியுறவுத்துறை அமைச்சரை சந்திக்க அறிவுறுத்தியுள்ளேன். ஆளுநர் அலுவலகத்தில், பெட்ரோல் குண்டு வீசப்படவில்லை. வெளியே சாலையில்தான் வீசப்பட்டது.
இதுகுறித்து காவல்துறை, பத்திரிகையாளர் சந்திப்பில் வீடியோ ஆதாரத்துடன் தெளிவுப்படுத்தியுள்ளது. தவறான குற்றச்சாட்டை சொல்கின்றனர் ஆளுநர் தரப்பினர். ஆளுநர் பாஜ காரராகவும், ஆளுநர் மாளிகை பாஜ அலுவலகமாகவும் மாறியிருப்பது வெட்கக்கேடு. இன்னாருக்கு இதுதான் என்பது ஆரியம். எல்லோருக்கும் எல்லாம் என்பது திராவிடம். இவ்வாறு கூறினார். கமுதி, மேலநீழிதநல்லூர், உசிலம்பட்டியில் தேவர் பெயரில் கல்லூரி அமைய காரணமாக கலைஞர் இருந்தார். இதில், 2021ல் மேலநீழிலநல்லூர் கல்லூரியை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டது திராவிட மாடல் அரசு.