திருமங்கலம்: விசாரணைக்கு வந்த ஐடி பெண் ஊழியரிடம் நகைகளை வாங்கி மோசடி செய்த வழக்கில் பெண் இன்ஸ்பெக்டர் கைதானார். மதுரை மாவட்டம், திருமங்கலத்தை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (30). இவர், பெங்களூருவில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், உசிலம்பட்டியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அபிநயாவுக்கும் (26) கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றது. பின் தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் அபிநயா புகார் செய்தார். அப்போது இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த கீதா (50), இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அபிநயா திருமணத்தின்போது, பெற்றோர் கொடுத்த 102 பவுன் நகையை கணவர் வீட்டார், பெண் வீட்டாரிடம் திரும்ப கொடுத்துவிடுவது என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து ராஜேஷ்குமார் 102 பவுன் நகைகளை இன்ஸ்பெக்டர் கீதாவிடம் ஒப்படைத்தார். நகைகளை வாங்கிய இன்ஸ்பெக்டர், அவைகளை வங்கியில் ரூ.42 லட்சத்திற்கு அடமானம் வைத்து பணத்தை எடுத்துக் கொண்டார். பேசியபடி நகைகள் திரும்ப கிடைக்காததால் ராஜேஷ்குமாரை தொடர்பு கொண்டு அபிநயா நகைகளை கேட்டுள்ளார். இதையடுத்து ஒப்படைத்த நகைகள் குறித்து இன்ஸ்பெக்டர் கீதாவிடம், ராஜேஷ்குமார் கேட்டபோது, அவர் மழுப்பலாக பதில் அளித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட எஸ்பியிடம் ராஜேஷ்குமார் புகார் தெரிவித்தார். இதையடுத்து கீதா கொஞ்சம், கொஞ்சமாக 64 பவுன் நகைகளை மட்டும் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனிடையே இந்த புகார் தொடர்பாக, டிஐஜி ரம்யாபாரதி கடந்த மே 23ம் தேதி திருமங்கலம் மகளிர் ஸ்டேஷனில் விசாரணை நடத்தி இன்ஸ்பெக்டர் கீதாவை சஸ்பெண்ட் செய்தார். மேலும், இந்த வழக்கில் 38 பவுன் நகையை கொடுக்காமல் கீதா இழுத்தடிக்கவே அவரை கைது செய்ய மதுரை எஸ்பி அரவிந்தன் உத்தரவிட்டார். இதையடுத்து திருமங்கலம் டவுன் போலீசார் நேற்று முன்தினம் இரவு கீதாவை, அவரது வீட்டில் கைது செய்தனர். பின்னர் அவரை, திருமங்கலம் மகளிர் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று, டிஎஸ்பி அருள் விசாரணை நடத்தி வருகிறார். கீதாவின் கணவர் சரவணன், கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிவது குறிப்பிடத்தக்கது.