மூணாறு: மூணாறு அருகே உள்ள இடமலைகுடிக்கு கான்கிரீட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு கேரளா எல்லைப் பகுதியில், மூணாறு அருகே அமைந்துள்ள இடமலை குடியில் அடர்ந்த வனத்தினுள் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி கடந்த 2010ல் மலைவாழ் மக்களுக்கென தனி ஊராட்சியாக உருவாக்கப்பட்டு இடமலைகுடி ஊராட்சி என செயல்படுகிறது. இங்கு செல்ல ரோடு வசதி இல்லாததால் மலைவாழ் மக்கள் 14 கி.மீ. தூரம் கரடு, முரடான பாதையில் நடந்து சென்று வந்தனர்.
இந்நிலையில் புல்மேடு முதல் இடலி பாறை வரை கான்கிரீட் ரோடு அமைக்க மலைவாழ் மக்கள் மேம்பாட்டு துறை ரூ.11.5 கோடி நிதி ஒதுக்கியது. இந்நிதியைக் கொண்டு கான்கிரீட் ரோடு அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. தற்போது 300 மீட்டர் தூரம் கான்கிரீட் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இதில் சில இடங்களில் குறுகிய ஓடைகள் அமைப்பது மழைக்காலத்தில் தண்ணீர் செல்ல சத்தியம் இல்லை என்று அப்பகுதி மக்கள் சிலர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். புல்மேடு முதல் இடலிப்பாறை வரையிலான 7 கிமீ தூரம், மூன்று மீட்டர் அகலத்தில் கான்கிரீட் ரோடு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.