ரோம்: இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், கஜகஸ்தான் வீராங்கனை எலனா ரைபாகினா சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் உக்ரைனின் அன்ஹெலினா கலினினாவுடன் (26 வயது, 47வது ரேங்க்) மோதிய ரைபாகினா (23 வயது, 6வது ரேங்க்) 6-4 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். 2வது செட்டில் ரைபாகினா 1-0 என முன்னிலை வகித்தபோது, இடது தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியில் இருந்து கலினினா விலக நேரிட்டது.
இதையடுத்து, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய ரைபாகினா இத்தாலி ஓபன் கோப்பையை முத்தமிட்டார். நடப்பு விம்பிள்டன் சாம்பியனான ரைபாகினா, ஒற்றையர் பிரிவில் வென்ற 5வது பட்டம் இது (2023 சீசனில் 2வது). இந்த வெற்றியால் மகளிர் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் அவர் 4வது இடத்துக்கு முன்னேற உள்ளார்.