ரோம்: இத்தாலி ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவோலினி அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இத்தாலியின் ரோம் நகரில் இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இப்போட்டிகளின் இறுதிக் கட்டமாக, சீன வீராங்கனை க்வின்வென் ஸெங்கை அரை இறுதிப் போட்டியில் வென்ற அமெரிக்க வீராங்கனை கோகோ காஃப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு அரை இறுதிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை பேடன் ஸ்டியர்ன்சை வீழ்த்திய இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவோலினி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். அதன் தொடர்ச்சியாக, நேற்று நடந்த இறுதிப் போட்டியில் கோகோ காஃப் – ஜாஸ்மின் பவோலினி மோதினர். போட்டியின் துவக்கம் முதல் ஜாஸ்மினின் ஆதிக்கமே காணப்பட்டது.
காஃப் உலகின் 4ம் நிலை வீராங்கனையாக இருந்தபோதும், 6ம் நிலை வீராங்கனையான ஜாஸ்மின் சிறப்பாக செயல்பட்டு, 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்றார். இதனால் சாம்பியன் பட்டமும், வெற்றிக் கோப்பையும் அவருக்கு வழங்கப்பட்டது. வெற்றி மங்கை ஜாஸ்மினுக்கு 1000 புள்ளிகளும், ரூ.9.35 கோடி பரிசுத் தொகையும், இரண்டாம் இடம் பிடித்த காஃப்புக்கு 650 புள்ளிகளும், ரூ.4.97 கோடி பரிசுத் தொகையும் கிடைத்தது.
* உலகத் தரவரிசை ஐந்தாம் இடத்துக்கு உயர்ந்த ஜாஸ்மின்
இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டிகள் முடிந்த நிலையில், மகளிர் டென்னிஸ் உலகத் தரவரிசை பட்டியலில் சிறிய மாற்றங்கள் ஏற்பட்டன. பட்டியலின் முதலிடத்தில் பெலாரஸ் வீராங்கனை அரீனா சபலென்காவும், 2ம் இடத்தில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியடெக்கும் தொடர்கின்றனர்.
இறுதிப் போட்டி வரை முன்னேறிய அமெரிக்க வீராங்கனை கோகோ காஃப் ஒரு நிலை உயர்ந்து 3ம் இடத்துக்கு முன்னேறினார். 3ம் இடத்தில் இருந்த அமெரிக்க வீராங்கனை ஜெஸிகா பெகுலா, ஒரு இடம் தாழ்ந்து, 4ம் இடத்துக்கு தள்ளப்பட்டார். இத்தாலி ஓபன் சாம்பியன் பட்டம் வென்ற ஜாஸ்மின் பவோலினி, ஒரு இடம் உயர்ந்து 5ம் இடத்தை பிடித்தார்.