பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் நேற்று, இத்தாலி வீராங்கனைகள் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றனர். பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் மகளிர் இரட்டையர் இறுதிப் போட்டி நேற்று நடந்தது. அதில், இத்தாலி வீராங்கனைகள் ஜாஸ்மின் பவோலினி, சாரா எர்ரானி இணை, செர்பிய வீராங்கனை அலெக்சாண்ட்ரா க்ருனிக், கஜகஸ்தான் வீராங்கனை அன்னா செர்கெயெவ்னா டேனிலினா இணையுடன் மோதியது.
இப்போட்டியின் முதல் செட்டை இத்தாலி இணை, 6-4 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றியது. 2வது செட், 6-2 என்ற புள்ளிக் கணக்கில் க்ருனிக் இணை வசம் சென்றது. அதையடுத்து வெற்றியைத் தீர்மானிக்கும் 3வது செட்டில் அபாரமாக ஆடிய இத்தாலி இணை, 6-1 என்ற புள்ளிக் கணக்கில் அநாயாசமாக வசப்படுத்தியது. அதனால், 2-1 என்ற கணக்கில் வென்ற இத்தாலி இணை, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இத்தாலி இணை, கடந்த 2024ல் நடந்த மகளிர் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் ஆடி போராடித் தோற்றது குறிப்பிடத்தக்கது.