ரோம்: இத்தாலி ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டியில் உலகின் நம்பர் 1 வீராங்கனை அரீனா சபலென்கா, உக்ரைன் வீராங்கனையை வென்று காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இத்தாலியின் ரோம் நகரில் இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த 4வது சுற்றுப் போட்டியில் பெலாரசை சேர்ந்த உலகின் நம்பர் 1 வீராங்கனை அரீனா சபலென்கா, உக்ரைன் வீராங்கனை மார்த்தா கோஸ்ட்யுக் மோதினர். இப்போட்டியில் முதல் செட்டை சபலென்கா எளிதில் கைப்பற்றினார். இருப்பினும் 2வது செட் கடும் போராட்டமாக இருந்தது. இறுதியில் அந்த செட்டையும் சபலென்கா வசப்படுத்தினர். அதனால், 6-1, 7-6 (10-8) என்ற நேர் செட் கணக்கில் வென்ற அவர் காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். சபலென்கா, இன்று நடக்கும் காலிறுதிப் போட்டியில் சீன வீராங்கனை ஸெங் க்வின்வென் உடன் மோதுவார்.
* ஆடவர் பிரிவில் அல்காரஸ், டிரேப்பர் அசத்தல் வெற்றி
இத்தாலி ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 4வது சுற்றுப் போட்டியில் பிரிட்டன் வீரர் ஜாக் அலெக்சாண்டர் டிரேப்பர், பிரான்ஸ் வீரர் கொரன்டின் மோடே மோதினர். இப்போட்டியில் இருவரும் தலா ஒரு செட்டை கைப்பற்றியதால், 3வது செட் பரபரப்பாக காணப்பட்டது. அதையும் சமாளித்து வசப்படுத்திய டிரேப்பர், 1-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் ஸ்பெயினை சேர்ந்த உலகின் 3ம் நிலை வீரர் கார்லோஸ் அல்காரஸ், ரஷ்யாவின் கரென் அப்கரோவிச் காஷனோவ் உடன் மோதினார். இப்போட்டியில், காஷனோவ் சளைக்காமல் ஆடியதால், 6-3, 3-6, 7-5 என்ற செட் கணக்கில் அல்காரஸ் போராடி வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.