Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இத்தாலி ஓபன் டென்னிஸ் நடப்பு சாம்பியன் ஸ்வெரவ் தோல்வி: நெம்பர் ஒன் சபலென்காவும் வெளியேற்றம்

ரோம்: இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடக்கிறது. நேற்று காலிறுதி ஆட்டங்கள் நடந்தன. அதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரும், நடப்பு சாம்பியனுமான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரவ் (28வயது, 2வது ரேங்க்), இத்தாலியின் லாரன்சோ முசெட்டி (23வயது, 9வது ரேங்க்) ஆகியோர் மோதினர். இதற்கு முன் இருவரும் மோதிய 3 ஆட்டங்களிலும் ஸ்வெரவ் தான் வென்றிருந்தார். அதனால் இந்த ஆட்டத்திலும் ஸ்வெரவ் ஆதிக்கம் செலுத்தி மீண்டும் அரையிறுதிக்கு முன்னேறுவார் என்ற நிலை ஆரம்பத்தில் இருந்தது.

ஆனால் டை பிரேக்கர் வரை நீண்ட முதல் செட்டை முசெட்டி 7-6(7-1) என்ற புள்ளி கணக்கில் வசப்படுத்தினார். அதனால் சோர்ந்துப் போன ஸ்வெரவை 2வது செட்டில் 6-4 என்ற புள்ளிக் கணக்கில் வேகமாக சாய்த்தார் முசெட்டி. 2 மணி 15 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தின் முடிவில் முசெட்டி 2-0 என நேர் செட்களில் வென்று சொந்த மண்ணில் அரையிறுதிக்கு முன்னேறினார். இத்தாலி ஓபனில் 2 முறை சாம்பியன் பட்டம், 3முறை பைனல் என சாதித்த ஸ்வெரவ் இந்த முறை காலிறுதியுடன் விடைபெற்றார்.

அதேபோல் பெண்கள் ஒற்றையர் பிரிவிலும் 3 முறை இத்தாலி ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற நடப்பு சாம்பியனும், போலத்தை சேர்ந்தவருமான இகா ஸ்வியாடெக் (23, 2வது ரேங்க்) 3வது சுற்றிலேயே தோற்று வெளியேறினார். இந்நிலையில் பெண்கள் ஒற்றையர் காலிறுதியில் பெலாரசின் அரினா சபலன்கா (27வயது, 1வது ரேங்க்), பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற சீனாவின் கின்வென் ஜெங்(22வயது, 8வது ரேங்க்) ஆகியோர் மோதினர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஆட்டத்தில் ஜெங் 6-4, 6-3 என நேர் செட்களில் உலகின் நெம்பர் ஒன் வீராங்கனையான அரினா சபலென்காவை எளிதில் வீழ்த்தினார். இந்த ஆட்டம் ஒரு மணி 37 நிமிடங்கள் நடந்தது. கடந்த முறை பைனல் வரை முன்னேறி இகா ஸ்வியாடெக்கிடம் வெற்றி வாய்ப்பை இழந்த சபலென்கா இந்த முறை காலிறுதியிலேயே வெளியேறி உள்ளார்.