ரோம்: இத்தாலி ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். இத்தாலியின் ரோம் நகரில் இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இப்போட்டிகளின் தொடர்ச்சியாக, அரையிறுதிப் போட்டியில் இத்தாலி வீரர் லொரென்ஸோ முஸெட்டியை வென்ற ஸ்பெயின் வீரரும், உலகின் 3ம் நிலை வீரருமான கார்லோஸ் அல்காரஸ் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். மற்றொரு அரை இறுதிப் போட்டியில் அமெரிக்க வீரர் டாம்மி பாலை வென்ற, இத்தாலி வீரரும், உலகின் முதல் நிலை வீரருமான ஜானிக் சின்னர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இந்நிலையில், சின்னர் – அல்காரஸ் இடையிலான இறுதிப் போட்டி நேற்று நடந்தது. முதல் செட்டில் இருவரும் சளைக்காமல் போராடியதால், டை பிரேக்கர் வரை நீண்டது. பின், அந்த செட்டை அல்காரஸ் கைப்பற்றினார். தொடர்ந்து நடந்த 2வது செட்டை சின்னர் எளிதில் இழந்தார். அதனால், 7-6 (7-5), 6-1 என்ற நேர் செட் கணக்கில் வென்ற அல்காரஸ் சாம்பியன் பட்டத்தையும் கோப்பையையும் வசப்படுத்தினார். பட்டம் வென்ற அல்காரசுக்கு 1000 புள்ளிகளும் ரூ. 9.35 கோடி பரிசுத் தொகை கிடைத்தது. 2ம் இடம் பிடித்த சின்னருக்கு ரூ. 4.97 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது.