புதுடெல்லி: மனிதகுலத்துக்கு எதிரான பயங்கரவாதத்தால் யாருக்கும் பயனில்லை. இது அமைதி, சகோதரத்துவத்துக்கான நேரம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜி20 நாடுகளின் சபாநாயகர்களின் 9வது உச்சி மாநாடு டெல்லியிலுள்ள யசோபூமியில் நேற்று தொடங்கியது. இதில் ஜி20 நாடுகளை சேர்ந்த நாடாளுமன்ற சபாநாயகர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்கின்றனர். பி20 என அழைக்கப்படும் 3 நாள் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்து உரையாற்றினார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, “உலகின் பல்வேறு நாடுகள் மோதல்களுக்கு எதிராக போராடுவது அனைவருக்கும் தெரியும். மோதல்கள் நிறைந்த உலகம் யாருடைய நலனுக்காகவும் இல்லை. மனித குலத்துக்கு எதிரான பயங்கரவாதத்தால் யாருக்கும், எந்த பயனும் இல்லை. பிளவுபட்ட சமூகத்தால் மனிதகுலம் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியாது. உலக சவால்களை சமாளிக்க பொதுமக்களின் பங்களிப்பை விட சிறந்த ஊடகம் எதுவும் இருக்க முடியாது. ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற உணர்வுடன் உலகை காண வேண்டும்” என்று தெரிவித்தார்.
* 2024 பொதுதேர்தலை காண வாருங்கள்
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “இந்தியா இதுவரை 17 மக்களவை தேர்தல்களையும், 300 சட்டப்பேரவை தேர்தல்களையும் நடத்தி உள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் நடைமுறையில் வௌிப்படைத் தன்மையையும், செயல்திறனையும் அதிகரித்துள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான மக்களவை தேர்தலில் 100 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். இதை காண நீங்கள் அனைவரும் இந்தியாவுக்கு வர வேண்டும்” என்று அழைப்பு விடுத்தார்.