திருவொற்றியூர்: திருவொற்றியூரில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் ராஜா (28). அண்ணாசாலையில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர், ஒரு இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ராஜாவுக்கு கஞ்சா பழக்கம் உள்ளதால், அதிகளவில் வாங்கி வீட்டில் வைத்து பயன்படுத்தியதோடு, நண்பர்களுக்கும் விற்பனை செய்துள்ளார். இதனால், தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த ராஜா மனைவியை தாக்கியுள்ளார். இந்நிலையில், ராஜா மீண்டும் கஞ்சா வாங்கி வந்து, சிறிய பாக்கெட்களாக பிரித்து, மடித்துக் கொண்டிருந்தார். இதை பார்த்த ராஜாவின் மனைவி, சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் திருவொற்றியூர் போலீசார் விரைந்து சென்று, ராஜா வீட்டில் சோதனை செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர். விசாரணையில், திருவொற்றியூர் வடக்கு ரயில்வே ஸ்டேஷன் சாலையை சேர்ந்த எம்பிஏ பட்டதாரி ஹரிஹரன் (25) என்பவரிடம் கஞ்சாவை வாங்கியதாக ராஜா கூறினார். அவரை பிடித்து விசாரித்தபோது, வாட்ஸ் அப் குழு மூலம் ஒருவரிடம் வாங்கியதாக கூறினார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ராஜா, ஹரிஹரன் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் தொடர்புடைய நபர்களை தேடி வருகின்றனர்.