Tuesday, June 17, 2025
Home மகளிர் தொழிலில் என்னை தூக்கி நிறுத்தியது எனது மகள்தான்!

தொழிலில் என்னை தூக்கி நிறுத்தியது எனது மகள்தான்!

by Nithya

நன்றி குங்குமம் தோழி

ஒரு தையல் ஸ்டோரி

20 வருடங்களுக்கு முன்பு செல்வி என்கிற ஒரு தாயின் ஆர்வத்தால் தொடங்கப்பட்ட சிறு தொழில், இன்று அவர் மகள் சியாமளாவின் விசாலமான பார்வை மற்றும் முயற்சியில் நவீன வடிவம் பெற்று, நவயுக பெண்களுக்கான ஆடை உலகமாக பரந்து விரிந்து நிற்கிறது. செல்வியிடம் பேசியதில்…‘‘பெருசா நான் ஃபேஷன் டிசைனிங் எல்லாம் படிக்கல. சாதாரணமாக தையல் கத்துக்கிட்டு கொஞ்சம் கொஞ்சமாக என்னை அதற்குள் செதுக்கிக் கொண்டேன்’’ என்றவர் உழைப்பாளர் தினம் அன்று பிறந்தவராம். ‘‘உழைப்புதான் என்னை இன்று இந்த அளவு உயர்த்தி இருக்கிறது’’ என்றவர், Oosinool என்ற பெயரில் பெண்களுக்கான பிரத்யேக பொட்டிக் ஒன்றை சென்னை வேளச்சேரியில் சிறப்பாக நடத்தி வருகிறார்.

‘‘நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் புதுச்சேரி. எங்க குடும்பம் பெரியது என்கிற அளவுக்கு கூட்டுக் குடும்ப வாழ்க்கை அது. பள்ளியில் முதல் மாணவியாக வரும் அளவுக்கு படிப்பு நன்றாகவே வந்தது என்றாலும், வீட்டில் நான்தான் மூத்த பெண் என்பதால், பத்தாம் வகுப்பு முடித்ததுமே 16 வயதில் திருமணம் செய்துவிட்டார்கள்.திருமணமாகி சென்னை வந்த எனது புகுந்த வீடும் மிகப்பெரிய குடும்பமாகவே இருந்தது. எனது கணவர் சொந்தமாக தட்டச்சு நிறுவனம் நடத்தி வந்தார். நானும் தட்டச்சில் ஆங்கிலம், தமிழ் இரண்டையும் கற்று தேர்ச்சிப் பெற்று, நிறுவனத்தை பொறுப்பாகக் கவனிக்கத் தொடங்கி, ஒவ்வொரு பேட்ஜிலும் நூறு பேரையாவது தேர்வுக்கு தயார் செய்து அனுப்பிக் கொண்டிருந்தேன். எனவே பொறுப்பை அவர் என்னிடம் ஒப்படைத்துவிட்டு, வேறொரு தொழிலுக்கு தன்னை மாற்றிக்கொண்டார்.

இந்த நிலையில்தான் கிடைத்த இடைவெளியை பயன்படுத்தி தையல் கற்கத் தொடங்கினேன்.ஒரே ஒரு தையல் மெஷினோடு என் தேவைக்கான உடைகளை தைக்கும்
விஷயமாக ஆரம்பித்து, அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் அளவுக்கு மெல்ல மெல்ல என்னை மெருகேற்றினேன். இது நடந்தது 1992ல். கம்ப்யூட்டர் வருகையால் டைப்ரைட்டிங் மெஷின்கள் கொஞ்சம் கொஞ்சமாக விடைபெற, அவற்றை ஓரங்கட்டிவிட்டு, தையல் மெஷினோடு, வீட்டில் இருந்து செய்யும் தொழிலாக சேலை வியாபாரத்தை கையில் எடுத்தேன். கிட்டதட்ட 20 ஆண்டுகள் இதே நிலையில்தான் என் பொழுதுகள் கழிந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் பி.ஏ. மற்றும் எம்.ஏ எக்னாமிக்ஸ் படித்து முடித்திருந்தேன்.
தொழிலில் நான் நஷ்டம் அடைந்த நேரங்கள் பல இருந்தது.

கோவிட் பரவலும் இணைந்து படுத்த, ‘கடையை மூடிவிடு’ என குடும்பத்திற்குள் அழுத்தங்கள் வர ஆரம்பித்தன. தொடங்கிய தொழிலையும், சம்பாதித்த வாடிக்கையாளர்களையும் விடக்கூடாது என்பதிலும், வாழ்க்கை முழுவதும் உழைத்து சம்பாதிக்கணும் என்பதிலும் குடும்பத்தில் இருந்தவர்களிடம் உறுதி காட்டினேன்.இந்த நிலையில் எனது மூத்த மகள் சியாமளா பொறியியல் படிப்பை முடித்து, சென்னையில் பிரபல ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணியில் இருந்தாள்.

அவள் எனது உணர்வுகளை மதித்து, ‘ஏன் நீங்கள் இதையே சின்ன பொட்டிக்கா மாற்றிப் பார்க்கலாமே’ என சொல்ல, தொழில் மாற்றத்திற்கு முதல் விதையை விதைத்தது எனது மகள் சியாமளாதான். For Eva என்கிற பெயரில் அதே இடத்தில் சின்னதாக பொட்டிக் தொடங்க, ஓரளவுக்கு தொழில் சூடு பிடித்தது. நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள் என வாடிக்கையாளர்கள் வர ஆரம்பித்தனர். இது நடந்தது 2013ல்.

என்னிடம் வரும் வாடிக்கையாளர்களுக்கு நான் எப்போதும் நோ சொன்னதே இல்லை. சரியான நேரத்திற்கு ஆர்டரை செய்து கொடுத்துவிடுவேன். இதனால் ஒரே மாதத்தில் 400 முதல் 500 ஆர்டர்கள் என 6 மாதத்திற்கான ஆர்டர்கள் புக்காகி இருந்தது. தனி ஒருத்தியாக பொட்டிக், டெய்லரிங் என சுழல்வது, கூடவே இட நெருக்கடி போன்ற சூழலில், உதவிக்கு ஒருசிலரை வைத்துக் கொண்டேன். நேரமே எனக்கு இல்லை என்றான நிலையில், தொழிலை இன்னும் விரிவுப்படுத்தலாம் என மகள் மீண்டும் அறிவுறுத்தினாள்.

முக்கிய சாலையில், கொஞ்சம் பெரிய இடமாகத் தேர்வு செய்து, பக்காவாக இன்டீரியர் செய்து, Oosinool என பெயரை மாற்றி தொழிலை வெற்றிகரமாகத் தொடங்கினோம். இன்று எங்களிடம் ரெடி டூ வேர் சேலை… ஷிப் அண்ட் கோ சேலை… பிரின்டெட் சேலை… காட்டன் வேர், வெஸ்டெர்ன் வேர் என எல்லாமே உண்டு. எங்கள் பொட்டிக் குறித்து, சோஷியல் மீடியா வழியாக தெரிந்து, பல்வேறு ஊர்களில் இருந்தும் வாடிக்கையாளர்கள் வர ஆரம்பித்தனர். ஆர்டர்களும் குவியத் தொடங்கியது. எல்லோர் மனதிலும் Oosinool இன்று நன்றாகவே பதிந்துவிட்டது. டெய்லரிங் யூனிட்… ஃபேஷன் டிசைனர்ஸ்… கட்டிங் மாஸ்டர்ஸ்… சேல்ஸ் கேர்ள்ஸ்… ஃபோட்டோ கிராஃபர்… மாடல்ஸ்… ஐடி டீம் என 24 பேருக்கு மேல் ஊழியர்கள் என்னிடம் வேலை செய்கிறார்கள்.

எனது இரண்டு மகள்களும் இஞ்சினியரிங் முடித்த நிலையில், மேல் படிப்புக்காக கனடா சென்று, அங்கேயே படிப்பு, வேலை என செட்டிலாக, மூத்த மகள் சியாமளா எனது தொழிலை மேம்படுத்துவதற்காகவே, தான் பார்த்துவந்த ஐ.டி வேலையை உதறிவிட்டு, கனடா சென்று பிசினஸ் தொடர்பான மேல் படிப்பை முடித்து, அங்கிருந்தே என் தொழிலுக்கான புதுப்புது ஐடியா, புரோமோஷன், விளம்பரம் என்று துணை நிற்கிறார்’’ எனப் புன்னகைத்தார் செல்வி.

‘‘உங்களுக்கு பிடித்தமான உங்கள் ரவிக்கை முதல், நாள்தோறும் வசதியாய் உணர வைக்கும் உங்களின் ஆடைகள் வரை, நீங்கள் அணியும் ஒவ்வொரு உடையும் உங்களுக்காகவே தயாரித்தது போல உணர வேண்டும் என்பதற்காக, ஒவ்வொரு ஊசி நூலின் நுனியிலும், ஒவ்வொரு வடிவமைப்பிலும் நாங்கள் மிகுந்த அக்கறை செலுத்துகிறோம்’’ என்றவர், ‘‘அதுவே எங்கள் தொழிலின் வெற்றி’’ என விரல் உயர்த்தி, ‘‘எங்களின் தயாரிப்பு வெறும் உடை அல்ல… எங்களின் கதை’’ என்றவாறு விடைபெற்றார்.

இந்த விளம்பரம் என் உணர்வு சார்ந்தது!

‘‘அம்மா மிகச் சிறிய இடத்தில் சின்ன யூனிட்டை வைத்துக் கொண்டு, முறையான பட்ஜெட் இல்லாமலே, திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான விஷயங்களை 20 ஆண்டுகளாக செய்வதைப் பார்த்து, ‘ஏன் இதையே தொடர்ந்து மீண்டும் மீண்டும் செய்யுறீங்க? பேசாமல் தொழிலை விட்டுவிட்டு ஓய்வெடுங்கள்” என்றேன். ஆனால் அம்மா எனக்கான தொழில் இதுவென பிடிவாதமாக மறுத்துவிட்டார். அவரின் தொழில் ஆர்வத்தைப் பார்த்து, இதையே இன்னும் கொஞ்சம் நவீனப்படுத்தி, வருமானத்தை எப்படி மேம்படுத்தலாம் என யோசித்ததில், நான் பார்த்து வந்த ஐடி வேலையை உதறிவிட்டு, பிசினஸ் மேனேஜ்மென்ட் படிக்க கனடா சென்றேன்.

படிப்பை முடித்ததும் அங்கேயே வேலையும் கிடைத்தது. சில வருடங்கள் பணியாற்றி பணத்தை சேமித்த பிறகு, இதுதான் சரியான நேரமென, அம்மாவின் தொழிலை மேம்படுத்தும் முயற்சிகளில் இறங்கினேன். நம்முடைய பாரம்பரிய உடைகளை நவீனமாக, எளிமையாக, தினசரி வாழ்க்கையில் பயன்படுத்தக்கூடியவையாக மாற்றி, நம்முடைய அடையாளத்தை பெருமையுடன் நாம் அணிய வேண்டும் என்கிற ஆசையில் ‘ready to wear saree’, ‘Zip and go Saree’ போன்றவற்றையும் கொண்டு வந்தோம். தொடக்கத்தில் நான் செய்த சின்ன முயற்சிக்கே மிகப்பெரிய வரவேற்பு
கிடைத்தது. தொடர்ந்து ஆறு மாதத்திற்கான ஆர்டர்களும் நிறைய புக்கானது.

பிறகுதான் எனக்கான ஃபாஷனாக பிரின்டெட் சேலைகளை உருவாக்கும், ‘SELAI’ என்கிற பிரிவை உருவாக்கும் முயற்சியை கையில் எடுத்தேன். என் கனவுக்கு உயிர் கொடுக்கும் வரமாக, நமது கலாச்சாரத்தை பிரதிபலிக்கிற தமிழில் உள்ள அழகான, தனித்துவமான வாக்கியங்களை தேர்ந்தெடுத்து சேலையில் பிரின்ட் செய்யத் தொடங்கி இருக்கிறோம். SELAIக்கான டிசைனில் தொடங்கி, வாசகங்களை பிரின்ட் செய்வது வரை ஒவ்வொன்றையும் நேரடியாக கவனித்தது, எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுக்க ஆரம்பித்தது.இப்போது நான் வெவ்வேறு விஷயங்களை எங்கள் தொழிலில் உருவாக்கும் முனைப்பிலும் இருக்கிறேன். அதில் ஒன்றுதான் விளம்பர யுக்தி. விளம்பரம் என்பது ஒவ்வொரு உடல் வடிவத்தையும், தோல் நிறத்தையும் பிரதிபலிக்க வேண்டும். அழகின் அனைத்து விதங்களையும் வெளிப்படுத்த வேண்டும். அதற்கான ஒரு மாற்றத்தை நான் முன்னெடுக்கிறேன் என்பதை பெருமையாகவே நினைக்கிறேன்.

குழந்தையில் இருந்தே என் நிறத்தை நேசிக்கும், பெருமைப்படுத்தும் யாரையும் சந்திக்க வில்லை. என் நிறத்தின் மீது நம்பிக்கை இல்லாத பெண்ணாகவே வளர்ந்தேன். என் போல் நிறம் கொண்ட பெண்கள், இந்த சமூகத்தில் வளர்வது கடினமானதாய் இருந்தது. என் பள்ளி பருவத்தில் வெளியான தொலைக்காட்சித் தொடர்கள், திரைப்படங்கள், விளம்பரங்கள் எதிலும் என்னைப்போல் நிறம் கொண்ட பெண்களை மையப்படுத்தியோ, பெருமைப்படுத்தியோ, மதிப்புடனோ காட்டவில்லை.

ஆனால், நான் வளர வளர எனது வேர், என் நிறம், என் அடையாளம் என அனைத்தும் அழகானது எனப் புரிய ஆரம்பித்தது. வளரிளம் பருவப் பெண்கள் தன் தோல் மற்றும் உடல் மீது நம்பிக்கையுடன் வளர வேண்டும் என்பதற்காகவே, அழகின் அளவுகோலை மீட்டெடுக்க, SELAI பிரிவின் மாடல்களை கருப்பு மற்றும் மாநிற தோற்றத்தில் தேர்ந்தெடுத்தேன். இந்த விளம்பரம் மார்க்கெட்டிங் சார்ந்தது அல்ல… என் உணர்வு சார்ந்தது’’- சியாமளா

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi