திருச்சி: மாவட்ட தலைவரை மாற்றிய விவகாரத்தில் காங்கிரஸ் மாவட்ட அலுவலகத்துக்கு பூட்டு போட்டு கட்சியினர் போராட்டம் நடத்தினர். திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக ஜவகர் இருந்து வந்தார். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக அவர் அந்த பொறுப்பில் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், திடீரென ரெக்ஸ் என்பவரை மாநகர் மாவட்டத் தலைவராக காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமை கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது. கட்சி மேலிடத்தின் இந்த திடீர் அறிவிப்பால் ஜவகர் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில், திருச்சி எம்பி திருநாவுக்கரசர், தனது ஆதரவாளரான ரெக்ஸை பரிந்துரை செய்து அகில இந்திய தலைமை மூலம் அவரை திருச்சி மாநகர் மாவட்ட தலைவராக நியமிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். தன்னிச்சையாக அவர் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டி, முன்னாள் மாவட்ட தலைவர் ஜவஹரின் ஆதரவாளர்கள் நேற்று கட்சியின் மாவட்ட அலுவலகமான அருணாச்சல மன்றத்துக்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜவஹரை மீண்டும் மாவட்ட தலைவராக நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து கோஷமிட்டனர். ஜவஹர், ரெக்ஸ் இருவரும் திருச்சி மாநகராட்சி கவுன்சிலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.