சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் பழனி தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஏ.சுப்புரத்தினம் தாக்கல் செய்த மனுவில், கடந்த 1991, 2011, 2016 மற்றும் 2021ல் எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி போட்டியிட்டார். 2021ல் நடந்த தேர்தலில் அவர் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டார். அதற்காக அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில் தனது மனைவி ராதாவின் சொத்து கணக்குகளை தாக்கல் செய்யவில்லை. அவரது மனைவி பங்குதாரராக இருந்த பாலாஜி புளு மெட்டல் நிறுவனத்தின் மூலம் அவருக்கு ரூ.69 லட்சத்து 36,333 வருமானம் வந்துள்ளது. அதை எடப்பாடி பழனிசாமி தனது வேட்பு மனுவில் தெரிவிக்கவில்லை.
அதுமட்டுமல்லாமல் எடப்பாடி பழனிசாமி தனது வேட்புமனுவில் தனக்கு 13 நிலங்கள்தான் உள்ளன என்று தெரிவித்திருந்தார். ஆனால், அவருக்கு சொந்தமான மேலும் 6 நிலங்கள் குறித்த தகவல்களை வேட்புமனுவில் மறைத்துவிட்டார். சேலம் மாநகர போலீஸ், எடப்பாடி பழனிசாமி மீது கடந்த 2021ல் பதிவு செய்த வழக்கையும் வேட்பு மனுவில் அவர் குறிப்பிடவில்லை. எடப்பாடி பழனிசாமியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அவர் எம்எல்ஏவாக இருந்த நாட்களில் அவர் பெற்ற சம்பளம் மற்றும் அலவன்ஸ் ஆகியவற்றை திரும்ப வசூலிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஓம் பிரகாஷ், எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், தேர்தல் ஆணையம் தரப்பில வழக்கறிஞர் நிரஞ்சன் ஆஜராகினர். அப்போது தலைமை நீதிபதி மனுதாரர் தேர்தல் ஆணையத்தை ஏன் அணுகவில்லை என்று கேட்டார். அதற்கு மூத்த வழக்கறிஞர் ஓம் பிரகாஷ், தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காததால்தான் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றார்.
இதை கேட்ட நீதிபதிகள், வேட்பு மனுவில் சரியான தகவல்களை தராவிட்டால் பதவி நீக்கம் கோரமுடியுமா?. பதவியில் இருக்கும்போது குற்றம் செய்திருந்தாலோ அல்லது எஸ்சி அல்லாமல் எஸ்சி ஒதுக்கீடு தொகுதியில் போட்டியிட்டாலோ பதவி நீக்கம் கோரலாம். ஆனால், உங்கள் வழக்கு தேர்தல் தொடர்பானது. தேர்தல் வழக்காகும் என்றார். அதற்கு மனுதாரர் வழக்கறிஞர், இதுபோன்ற வழக்குகளில் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான தீர்ப்புகள் உள்ளன. அவற்றை தாக்கல் செய்ய அனுமதி தர வேண்டும் என்றார். இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பான தீர்ப்புகளை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 3ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.