சென்னை: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் 2 ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு வரவுள்ளது என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். புவி கண்காணிப்புக்கான அதிநவீன இஓஎஸ்-08 உட்பட 2 செயற்கைக்கோள்கள், எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் மூலம் இன்று (ஆகஸ்ட் 16) விண்ணில் ஏவப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் நிருபர்களிடம் கூறியதாவது,”எஸ்எஸ்எல்வி டி3 ராக்கெட் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதையடுத்து வணிக ரீதியாக செயல்படுத்தப்படும் தொழில்நுட்பம் தனியாருக்கு வழங்கப்படும். தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் 2 ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு வரவுள்ளது.
எஸ்எஸ்எல்வி ராக்கெட் தொழில்நுட்பம் தனியாருக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தொழில்நுட்பம் பரிமாற்றம் தொடர்பாக பல நிறுவனங்களிடம் கருத்து கேட்கப்பட்டது. பல நிறுவனங்கள் ஆர்வம் காட்டின. தகுதியான நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தொழில்நுட்ப பரிமாற்றம் நடைபெறும். தனியார் நிறுவனங்களின் வணிக ரீதியான செயற்கைக்கோள்கள் இனி என்எஸ்ஐஎல் நிறுவனம் மூலம் ஏவப்படும். உள்நாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த தொழில்நுட்பம் வழங்கப்படும்.
இதுமட்டுமல்லாது, எஸ்எஸ்எல்வி டி3 ராக்கெட் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள்கள் விண்வெளியில் புற ஊதா கதிர்கள், காமா கதிர்கள் விண்வெளியில் எப்படி இருக்கிறது என்பதை கண்டறிந்து தகவல் தெரிவிக்கும். இது ககன்யான் திட்டத்திற்கு உதவியாக இருக்கும். மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் அடுத்தாண்டு செயல்படுத்தப்படும். அதற்கு முன்னதாக ஆளில்லா திட்டம் (unmanned mission) டிசம்பரில் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்திற்கான ராக்கெட் ஹரிகோட்டாவிற்கு வந்தடைந்துள்ளது; ஒருங்கிணைப்பு பணிகள் அடுத்த சில மாதங்களில் முடிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்வின் போது திட்ட இயக்குனர் வினோத் மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் ராஜராஜன், அவினாஷ், சங்கரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.