சென்னை: தமிழ்நாட்டின் இஸ்ரோ விஞ்ஞானி நெல்லை சு.முத்து உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், திருநெல்வேலியில் பிறந்த இவர் ஸ்ரீஹரிகோட்டா சதீஸ் தவான் விண்வெளி மையத்தில் முதல்நிலை விஞ்ஞானியாக பணியாற்றினார். தமிழ்நாடு அரசின் சிறந்த நூலாசிரியர் விருதினையும், மலேசியாவின் உலகத் தமிழ்க் கவிஞர் பேரவையால் வழங்கப்பட்ட கவிமாமணி விருதினையும் பெற்றிருக்கிறார்.
இவர் அறிவியல், சிறுவர் இலக்கியம், கவிதை, வரலாறு, மொழிபெயர்ப்பு, திறனாய்வு எனும் தலைப்புகளில் 70க்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார். மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அறிவியல் அறிஞர் அப்துல்கலாம் அவர்களுடன் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர் என்று அவரால் பாராட்டப் பெற்றவர். இவருடைய இழப்பு அறிவியல் ஆய்வுதளத்தில் இயங்கும் அனைவருக்கும் பேரிழப்பாகும். இவரின் இழப்பால் வாடும் அன்னாரின் குடும்ப உறுப்பினர்களுக்கும், நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்தார்.