ஜெருசலேம்: காசாவில் தரைவழி தாக்குதலை விரிவுபடுத்திய இஸ்ரேல் ராணுவம், ஹமாசின் பதுங்கு குழி, சுரங்கங்களை குண்டுவீசி அழித்தது. வான்வழி தாக்குதலில் தொலைதொடர்பு கட்டமைப்புகள் தகர்க்கப்பட்டதால், காசாவில் தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தின் காசாவை ஆளும் ஹமாஸ் படையினர் கடந்த 7ம் தேதி எல்லைதாண்டி இஸ்ரேல் நாட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் போர் நேற்று 22வது நாளை எட்டியது. இதுவரை வான்வழி தாக்குதல் நடத்தி, காசாவில் பெரும்பாலான கட்டிடங்களை தரைமட்டமாக்கிய இஸ்ரேல், அடுத்தகட்டமாக கடந்த வெள்ளிக்கிழமை தரைவழி தாக்குதலை தொடங்கியது.
நேற்று முன்தினம் இரவிலிருந்து விடிய விடிய போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்த நிலையில், இஸ்ரேல் ராணுவத்தின் காலாட்படை மற்றும் கவச வாகனங்கள் வடக்கு காசாவில் தரைவழி தாக்குதலில் தீவிரமாக ஈடுபட்டன. இதில் ஹமாஸின் 150 சுரங்கங்கள் மற்றம் நிலத்தடி பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. இதுதவிர பாலஸ்தீன தொலைதொடர்பு நிறுவனங்களின் கட்டிடங்கள் மீதும் போர் விமானங்கள் குண்டுவீசின. இதனால் காசாவில் தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால், உயிரிழப்பு குறித்த தகவல் அறிவது, மருத்துவ சேவை பெற ஆம்புலன்ஸ்களை அழைப்பதற்கு இனி வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. காசாவில் உள்ள தங்களின் பணியாளர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என உலக சுகாதார நிறுவனமும் கூறி உள்ளது. சர்வதேச பத்திரிகையாளர்கள் தகவல் சேகரிப்பதும் கடினமாகி உள்ளது. தற்போது சேட்டிலைட் போன்கள் மட்டுமே இயங்குவதாக சில ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே, உணவு, குடிநீர், மின்சாரம், எரிபொருள் இல்லாமல் காசாவில் 23 லட்சம் மக்கள் தவிக்கும் நிலையில் தகவல் தொடர்பும் துண்டித்திருப்பதன் மூலம், உலகிலிருந்து முற்றிலுமாக அவர்கள் துண்டிக்கப்பட்டுள்ளனர். காசாவில் இதுவரை இப்போரில் பலியானோர் எண்ணிக்கை 7,703 ஆக அதிகரித்துள்ளது. இதில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ள இஸ்ரேல் ராணுவம் தனது கவச வாகனங்களுடன் வடக்கு காசாவில் தொடர்ந்து முன்னேறியபடி ஹமாசுடன் சண்டையிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
* எலான் மஸ்க் உதவிக்கரம்
காசாவில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் தனது ஸ்டார்லிங்க் இணையதள நிறுவனம் காசாவில் உள்ள சர்வதேச உதவி அமைப்புகளுக்கு செயற்கைகோள் உதவியுடன் தகவல்தொடர்பு சேவையை வழங்கும் என அறிவித்துள்ளார்.