துபாய்: இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பின் உளவாளிகள் சந்தேகிக்கப்படும் மேலும் 3 பேருக்கு ஈரான் மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது. இதுகுறித்து ஈரான் அரசு செய்தி நிறுவனம் இர்னா வெளியிட்டுள்ள செய்தியில், இஸ்ரேலுடன் சமீபத்தில் நடந்த போர் தொடர்பாக 3 பேருக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈரானின் மேற்கு பகுதியில் உள்ள அஸர்பைஜான் மாகாணத்தில் உள்ள உர்மியா சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆஸாத் ஷோஜேய், எத்ரிஸ் அலி மற்றும் ஈராக்கை சேர்ந்த ரசோல் அகமது ரசோல் ஆகிய 3 பேரும் நாட்டுக்குள் கொலை செய்யும் கருவியை கொண்டு வந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது. இஸ்ரேலுடன் நடந்த போரின் போது, ஏராளமானோரை ஈரான் தூக்கிலிட்டுள்ளது. ஜூன் 16ம் தேதிக்கு பிறகு இஸ்ரேலுடன் நடந்த மோதலில், 6 பேரை ஈரான் தூக்கிலிட்டுள்ளது.
உளவு வேலைகளில் ஈடுபட்டவர்கள் தாங்களாகவோ நேரில் வந்து குற்றத்தை ஒப்பு கொள்ள வேண்டும் என்று ஈரான் அரசு வெளியிட்டுள்ளது. இதனால் அங்கு மரண தண்டனை விதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என மனித உரிமை செயற்பாட்டாளர்கள் எச்சரித்துள்ளனர். இஸ்ரேலின் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் 28 பேர் உயிரிழந்தனர். 1,000 பேர் படுகாயமடைந்தனர். ஈரானில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
போரில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து ஈரான் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 606 பேர் பலியாகினர். 5332 பேர் படுகாயமடைந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகள் ஆர்வலர்களின் தகவலின்படி, ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 1054 பேர் கொல்லப்பட்டனர். 4,476 பேர் படுகாயமடைந்தனர்.இதில் 417 பேர் பொதுமக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.