சென்னை: இஸ்ரேலில் இருந்து 2ம் கட்டமாக நேற்று 28 தமிழர்கள் சிறப்பு விமானத்தில் அழைத்து வரப்பட்டனர். இஸ்ரேல் – பாலஸ்தீனம் நாடுகளுக்கு இடையே தற்போது போர் நடந்து வருகிறது. இதையடுத்து இஸ்ரேலில் சிக்கி தவிக்கும் தமிழர்களை தமிழகத்துக்கு அழைத்து வரும் பணியில் தீவிரமாக நடந்து வருகிறது. இஸ்ரேலில் தமிழர்கள் 128 பேர் சிக்கி உள்ளதாக தகவல்கள் வெளியானது. இவர்களில் நேற்று முன்தினம் 21 தமிழர்கள் இஸ்ரேலில் இருந்து இந்தியா வந்தனர். இந்நிலையில் 2ம் கட்டமாக நேற்று மதுரை, திண்டுக்கல், கரூர், தென்காசி, தர்மபுரி, திருப்பூர், திருவண்ணாமலை, திருச்சி, சென்னை, விழுப்புரம், திருப்பத்தூர், சேலம், கோவை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 28 தமிழர்கள் இஸ்ரேலில் இருந்து சிறப்பு விமானத்தில் நேற்று காலை 6 மணிக்கு டெல்லி வந்தனர். இவர்களில் 16 தமிழர்கள் சென்னை விமான நிலையத்துக்கும், 12 தமிழர்கள் கோவை விமான நிலையத்திற்கும் சென்றனர். இதையொட்டி, 28 தமிழர்கள் அவர்களது சொந்த மாவட்டத்துக்கு அரசு வாகனம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நிகழ்வின்போது, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அவர்களை வரவேற்றார்.