ஜெருசலேம் : லெபனானில் தீவிரவாதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட பேஜர், வாக்கி – டாக்கி தாக்குதலில் இஸ்ரேலுக்கு தொடர்பு இருப்பதை அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒப்புக் கொண்டார். காசா போர் தொடங்கிய கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதியில் இருந்தே ஹமாசுக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த அமைப்பு ஈரான் ஆதரவில் செயல்படும் அமைப்பாகும். இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன் லெபனான், டெல் அவிவ் மற்றும் சிரியா முழுவதும் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திய ஆயிரக்கணக்கான பேஜர்கள், வாக்கி டாக்கிகள் வெடித்துச் சிதறிய விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதவிர, வீடுகளின் மேற்கூரையில் பொருத்தி இருந்த சோலார் பேனல் உள்ளிட்ட மின்சாதனங்கள் வெடித்துச் சிதறின. இந்த சம்பவங்களில் 37 பேர் பலியாகினர். 2,931 பேர் காயமடைந்தனர்.
இதனிடையே பேஜர், வாக்கி டாக்கி தாக்குதலுக்கு பின்னணியில் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொஸாட் உள்ளதாக ஹமாஸ் அமைப்பு குற்றம் சாட்டியது. இருந்தாலும் பேஜர் தாக்குதல் குறித்து எந்த விளக்கமும் அளிக்காமல் இஸ்ரேல் அமைதி காத்து வந்தது. இந்த நிலையில் முதன்முறையாக இஸ்ரேல் அமைச்சரவை கூட்டத்தில் பேசிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு,ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது பேஜர், வாக்கி டாக்கி வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்த உத்தரவிட்டதை ஒப்புக் கொண்டார். இந்த தகவலை அவரது செய்தி தொடர்பாளர் ஓமர் தோஸ்த்ரி உறுதி செய்துள்ளார்.பெய்ரூட்டில் ஹெஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலும் தான் ஒப்புதல் வழங்கிய பின்னரே நடந்ததாக நெதன்யாகு கூறியுள்ளார். மேலும், அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றதிலிருந்து அவருடன் 3 முறை பேசிவிட்டதாகவும் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.