கன்னாஸ்கிஸ்: ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் தன்னை தற்காத்துக் கொள்ள முழு உரிமை உள்ளது என உச்சி மாநாட்டில் ஜி7 நாடுகளின் தலைவர்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், தீவிரவாதத்தின் முக்கிய ஆதாரமாக ஈரான் இருப்பதாகவும், அந்நாடு ஒருபோதும் அணு ஆயுதம் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது என்றும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டை அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீரென பாதியிலேயே ரத்து செய்து விட்டு, அமெரிக்கா புறப்பட்டு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து மற்றும் ஜப்பான் ஆகிய 7 பணக்கார நாடுகள் அடங்கிய ஜி7 அமைப்பின் உச்சி மாநாடு கனடாவின் கன்னாஸ்கிஸ் நகரில் கடந்த 2 நாட்கள் நடந்தது. தற்போது காசாவில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நீடிக்கிறது. ஈரானுடன் இஸ்ரேல் புதிய மோதலை தொடங்கி உள்ளது. இதனால் மத்திய கிழக்கில் அசாதாரண சூழல் நிலவுகிறது. ரஷ்யா-உக்ரைன் இடையேயான போரில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு போர் நிறுத்தத்திற்கான சூழல் உருவாகி வருகிறது. இதுதவிர, அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக நாடுகள் மீது கடுமையான வர்த்தக வரிகளை விதித்துள்ளார்.
எனவே, மத்திய கிழக்கில் போர் சூழலை மோசமாக்கும் இஸ்ரேலை கண்டிப்பது குறித்தும், அமெரிக்காவின் வர்த்தக வரிகள் விவகாரத்தில் சுமூக தீர்வு காண்பது குறித்தும் ஜி7 மாநாட்டில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் ஜி7 மாநாடு உலகளவில் முக்கியத்துவம் பெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக இந்தியா சார்பில் பிரதமர் மோடியும் பங்கேற்க சென்றார். இந்நிலையில், மாநாட்டின் முக்கிய ஆலோசனை கூட்டம், தலைவர்கள் சந்திப்பு நேற்று நடக்க இருந்த நிலையில், அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒருநாள் முன்பாக பாதியிலேயே நேற்று முன்தினம் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அவர் அவசரமாக நாடு திரும்புவதற்கான காரணம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. ஈரான்-இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்த நிலையில், டிரம்ப் அமெரிக்கா திரும்பியதாக அவரது ஊடக செயலாளர் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் கனடா வந்த டிரம்ப் மாநாட்டில் பேசுகையில், ‘‘ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும். அவர்களுக்கு 60 நாள் அவகாசம் வழங்கினோம். அதையும் வீணாக்கினர். இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தும் முன்பாக ஈரான் ஒப்பந்தம் செய்து கொள்ள முன்வந்திருக்க வேண்டும். அவர்கள் மிகவும் தாமதித்து விட்டனர்’’ என்றார். மேலும், தெஹ்ரானை விட்டு ஈரான் மக்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என தனது ட்ரூத் சமூக ஊடக தளத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த மாநாட்டில் இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டிரம்ப் புறப்படும் முன்பாக ஜி7 தலைவர்களின் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில், ‘மத்திய கிழக்கில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறோம். இந்தச் சூழலில், இஸ்ரேல் தன்னைத் தற்காத்துக் கொள்ள உரிமை உண்டு. இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான எங்கள் ஆதரவை மீண்டும் வலியுறுத்துகிறோம். பொதுமக்களின் பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும் நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்.
பிராந்திய உறுதியற்ற தன்மை மற்றும் பயங்கரவாதத்தின் முக்கிய ஆதாரமாக ஈரான் உள்ளது. ஈரானிடம் ஒருபோதும் அணு ஆயுதம் இருக்க முடியாது என்பதில் நாங்கள் தொடர்ந்து தெளிவாக இருந்து வருகிறோம். மத்திய கிழக்கில் பரந்த அளவிலான விரோதப் போக்கிற்கும், காசா போர் நிறுத்தத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஈரான் நெருக்கடிக்கு தீர்வு காணப்பட வேண்டும். சர்வதேச எரிசக்தி சந்தைகளுக்கான தாக்கங்கள் குறித்து நாங்கள் விழிப்புடன் இருப்போம்’ என ஈரானுக்கு கண்டனமும், இஸ்ரேலுக்கு ஆதரவும் தெரிவிக்கப்பட்டது.
ஈரான்-இஸ்ரேல் மோதல், உக்ரைன் விவகாரம், வரி விதிப்பு என அத்தனை விவகாரங்களிலும் ஜி7 நாடுகளுக்கு முரணான நிலைப்பாட்டை டிரம்ப் கொண்டிருக்கும் நிலையில், ஜி7 மாநாட்டின் கூட்டறிக்கையிலும் அது எதிரொலித்தது.
ஒருவேளை இஸ்ரேல்-ஈரான் இடையே போர் நிறுத்தத்திற்கான நடவடிக்கையை அமெரிக்கா எடுப்பதாக இருந்தால் நல்லது என டிரம்ப் அவசரமாக நாடு திரும்பியது குறித்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பேட்டி அளித்திருந்தார். இதற்கு அவரை கடுமையாக கண்டித்த டிரம்ப், தனது ட்ரூத் சமூக ஊடக பதிவில், ‘‘நான் ஏன் வாஷிங்டன் திரும்புகிறேன் என்ற தகவல் மேக்ரானுக்கு தெரியாது. அவர் விளம்பரம் தேட முயற்சிக்கிறார். நான் திரும்புவதற்கும் போர் நிறுத்தத்திற்கும் தொடர்பு இல்லை. அதைவிட மிகப்பெரிய காரணம் உள்ளது. மேக்ரான் எப்போதும் தவறாக புரிந்து கொள்கிறார்’’ என்றார்.
டிரம்ப் முன்கூட்டியே புறப்பட்டதால் அவருடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, மெக்சிகோ அதிபர் கிளாடியாவுடன் நடக்க இருந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. ரஷ்ய அதிபர் புடினுடன் 50 நிமிடங்கள் தொலைபேசியில் பேசிய டிரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்திப்பதை தவிர்த்துள்ளார். முன்னதாக, இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மருடன் வர்த்தக ஒப்பந்தத்தில் டிரம்ப் கையெழுத்திட்டார். டிரம்ப் ஜி7 உச்சிமாநாட்டிலிருந்து பாதியிலேயே கிளம்புவது இது 2வது முறை. கடந்த 2018ம் ஆண்டு, வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன்னைச் சந்திப்பதற்காக, கனடாவின் கியூபெக்கில் நடந்த ஜி7 மாநாட்டிலிருந்து பாதியிலேயே கிளம்பிச் சென்றார்.
* கனடா சென்றார் மோடி
கனடா பிரதமர் மார்க் கார்னி அழைப்பின் பேரில், ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர் பிரதமர் மோடி பங்கேற்றார். இதற்காக 3 நாடுகளுக்கு 5 நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி நேற்று காலை கனடாவின் கால்கேரி நகருக்கு சென்றடைந்தார். 2015க்குப் பிறகு பிரதமர் மோடி பங்கேற்கும் முதல் கனடா பயணம் இது. கனடாவில் கடந்த 2023ல் காலிஸ்தான் தீவிரவாதி நிஜ்ஜார் கொல்லப்பட்ட பிறகு இந்தியா கனடா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. தற்போது கார்னி தலைமையில் அமைந்துள்ள புதிய அரசு இந்தியாவுடன் மீண்டும் உறவை புதுப்பிக்க விரும்புகிறது. இதனால் பிரதமர் மோடியின் இந்த கனடா பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. மேலும் பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு மோடி சென்றுள்ள முதல் வெளிநாட்டு பயணம் இது. இதில் ஜி7 நாடுகளின் தலைவர்களை தனித்தனியாக சந்தித்து பேச உள்ளார். அப்போது பஹல்காம் தாக்குதலுக்காக பாகிஸ்தானுக்கு தரப்பட்ட பதிலடிக்கு இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்த ஜி7 நாடுகளின் தலைவர்களுக்கு மோடி நன்றி கூற உள்ளார்.
* ரஷ்யாவை நீக்கியது பெரிய தவறு
கடந்த 2014ம் ஆண்டு உக்ரைனின் கிரிமியாவை தனது நாட்டுடன் இணைத்ததால், ரஷ்யா ஜி8 நாடுகள் அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டு, ஜி7 அமைப்பாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதற்கு டிரம்ப் கண்டனம் தெரிவித்தார். மாநாட்டில் அவர் பேசுகையில், ‘‘ரஷ்யாவை ஜி8 அமைப்பிலிருந்து நீக்கியது மிகப்பெரிய தவறு. புடின் என்னுடன் மட்டுமே பேசுகிறார். வேறு யாருடனும் பேச அவர் விரும்பவில்லை’’ என்றார். ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் அளித்த பேட்டியில், ‘‘ஜி20 போன்ற அமைப்புகளுடன் ஒப்பிடுகையில் ஜி7 மிகவும் பயனற்றதாகி விட்டது’’ என்றார்.
* ரகசிய அறையை தயார்படுத்துங்க பீதியை கிளப்பிய டிரம்ப்
கனடாவில் இருந்து ஜி7 மாநாட்டை பாதியில் ரத்து செய்து விட்டு கிளம்பிய அமெரிக்க அதிபர் டிரம்ப், வெள்ளைமாளிகையில் உள்ள ரகசிய அறையான சிட்சுவேஷன் அறையை தயார்படுத்த தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்கு உத்தரவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. வெள்ளைமாளிகையின் மேற்கு பகுதியில் இந்த ரகசிய அறை அமைந்துள்ளது. எந்தவொரு நெருக்கடியான காலகட்டத்திலும் அமெரிக்க அதிபர்கள் முக்கியமான முடிவுகளை எடுக்க இந்த அறையில் தேசிய பாதுகாப்பு கவுன்சிலை கூட்டுவது வழக்கம். பராக் ஒபாமா அதிபராக இருந்த போது இந்த அறையில் தான் ஒசாமா பின்லாடனை கொல்வதற்கான திட்டம் குறித்து ஆலோசனை நடத்தினார்.
கடந்த 2019ல் சிரியாவில் ஐஎஸ் தீவிரவாத தலைவர் அபு பக்கர் அல் பாக்தாதியை அமெரிக்க படைகள் படுகொலை செய்த சம்பவத்தை அப்போதைய அதிபராக இருந்த டிரம்ப் இந்த அறையில் இருந்து நேரடியாக பார்த்துள்ளார். இங்கு, உலகின் எந்த மூலையையும் கண்காணிக்கும் அதிநவீன தகவல் தொடர்பு சாதனங்கள் உள்ளன. ஈரான் உச்ச தலைவர் காமெனியை கொன்றால் தான் போர் முடிவுக்கு வரும் என இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு கூறியிருக்கும் நிலையில், ரகசிய அறையை தயார்படுத்த டிரம்ப் உத்தரவிட்டது பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.