மதுரை: மதுரை கோரிப்பாளையம் ஏவி மேம்பாலத்தில் இஸ்ரேல் மற்றும் இந்திய தேசியக்கொடி பதித்த பேனரை பறக்க விட்ட பாஜ நிர்வாகிகள் மற்றும் ஆர்எஸ்எஸ் உறுப்பினர் என மூவரை போலீசார் கைது செய்தனர். மதுரை, கோரிப்பாளையம் ஏவி மேம்பாலத்திற்கு நேற்று மாலை வந்த 3 இளைஞர்கள், இஸ்ரேல் மற்றும் இந்திய தேசிய கொடிகளுடன் பாரதம் இஸ்ரேலுடன் நிற்கிறது என்ற ஆங்கில வாசகம் அச்சிடப்பட்ட பேனரை பறக்க விட்டு கோஷம் எழுப்பினர். தகவல் அறிந்து அங்கு வந்த மதிச்சியம் போலீசார், அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள், மதுரை மாநகர் மாவட்ட பாஜ இளைஞரணி பொதுச்செயலாளர் ரகுபதி, மாநகர இளைஞரணி துணைத்தலைவர் சரத்குமார், ஆர்எஸ்எஸ் உறுப்பினர் பிரவின் என தெரியவந்தது. பாஜ இளைஞரணி நிர்வாகிகளின் நடவடிக்கையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.