புதுடெல்லி: இஸ்ரேல் – ஹமாஸ் போருக்கு மத்தியில் நீதியில்லை என்றால் அமைதியும் இல்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா கருத்து தெரிவித்துள்ளார். இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்புக்கும் இடையே நடந்து வரும் போர் குறித்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அந்த கட்டுரையில், ‘நாகரீக உலகில் வன்முறைக்கு இடமில்லை என்பதை காங்கிரஸ் கட்சி நம்புகிறது. கடந்த 7ம் தேதி இஸ்ரேல் மீதான ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலை கண்டித்தோம்.
அதேநேரம் காசா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இஸ்ரேலின் பெரிய அளவிலான ராணுவ நடவடிக்கையானது, ஆதரவற்ற மற்றும் அப்பாவி மக்களைப் பழிவாங்கும் வகையில் உள்ளது. உலகின் மிக சக்திவாய்ந்த ராணுவத்தின் அழிவு சக்தியானது, குழந்தைகள், பெண்கள் மீது பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த போரினால் பல குடும்பங்கள் அழிந்துள்ளன. மிகப்ெபரிய மனிதாபிமான நெருக்கடியை மக்கள் சந்தித்துள்ளனர். பாலஸ்தீன மக்களுக்கு தண்ணீர், உணவு, மின்சாரம் வழங்காதது கூட்டுத் தண்டனையாகும். உதவி செய்ய செல்வோரையும் காசாவிற்கு வெளியே தடுக்கப்பட்டனர். மிகக் குறைந்த அளவிலேயே நிவாரண உதவிகள் சென்றடைகிறது. இது மனிதாபிமானமற்றது மட்டுமன்றி, சர்வதேச சட்டத்தை மீறும் செயலாகும்.
காசாவின் பெரும் பகுதியை அழிப்பதாக மூத்த இஸ்ரேலிய அதிகாரிகள் பேசி வருகின்றனர். இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர், பாலஸ்தீனியர்களை மனித விலங்குகள் என்று வர்ணித்துள்ளார். இவர்களின் மனிதாபிமானமற்ற சொல்லாடல் அதிர்ச்சியளிக்கிறது. மனிதநேயம் தற்போது சோதனைக்கு ஆளாகி உள்ளது. பாலஸ்தீனியர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண முடியும். அவர்களுக்கு மறுக்கப்பட்ட இறையாண்மை அரசுக்கான வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும். அதே சமயம் இஸ்ரேலின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும். எங்களை (காங்கிரஸ்) பொறுத்தமட்டில் நீதியின்றி அமைதி ஏற்படாது. உலகின் சக்திவாய்ந்த நாடுகள், இரு தேசக் கோட்பாட்டை மீட்டெடுக்கும் செயல்முறையை மீண்டும் தொடங்க வேண்டும்.
பாலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்கும் நியாயமான அமைதியுடன் வாழ உரிமை உண்டு என்ற நம்பிக்கையை காங்கிரஸ் கடைப்பிடித்து வருகிறது. இஸ்ரேலிய மக்களுடனான நட்பை மதிக்கிறோம். அதேநேரம் பாலஸ்தீனியர்கள் சுயமரியாதையுடன் வாழும் உரிமையை அவர்களுக்கு அளிக்க வேண்டும். சமீபத்தில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில், காசாவில் போர் நிறுத்தம் தொடர்பான தீர்மானத்தில் இந்தியா பங்கேற்காதது ஏற்கதக்கது அல்ல; இதுவொரு பைத்தியக்கார முடிவு. போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் போது, செல்வாக்குமிக்க சில நாடுகள் ஒரு பக்கச்சார்பாக நடந்துகொள்வது துரதிர்ஷ்டவசமானது’ என்று கூறியுள்ளார்.