டெல்லி :இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இருந்து மீண்டும் 235 இந்தியர்களை அழைத்துக் கொண்டு 2வது சிறப்பு விமானம் இந்தியா வந்தடைந்தது. 8வது நாளாக நடைபெற்று வரும் இஸ்ரேல் – ஹமாஸ் போரில் இதுவரை காசாவில் மட்டும் 1350 பேர் பலியாகி விட்டனர். இஸ்ரேல் தரப்பில் 1300 பேர் பலியாகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த போரானது மத்திய கிழக்கு நாடுகளிலும் பரவி வருவதால், இஸ்ரேலில் உள்ள தங்கள் நாட்டு மக்களை மீட்க உலக நாடுகள் தீவிர முயற்சி எடுத்து வருகின்றன.
அதன்படி, இஸ்ரேல்-ஹமாஸ் போரால் இஸ்ரேலில் உள்ள 18 ஆயிரம் இந்தியர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. அவர்களை பத்திரமாக மீட்கும் பணியில் ஒன்றிய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை பத்திரமாக மீட்கும் பொருட்டு, ஒன்றிய அரசு தொடங்கியுள்ள ‘ஆபரேஷன் அஜய்’ என்ற திட்டத்தின் கீழ் நேற்று காலை 14 தமிழர்கள் உட்பட 212 இந்தியர்கள் டெல்லி விமானம் நிலையம் வந்தடைந்தனர்.
இந்த நிலையில், இஸ்ரேலில் இருந்து 235 இந்தியர்களுடன் 2வது விமானம் இன்று காலை டெல்லி வந்தது.டெல் அவிவ் நகரில் உள்ள பென்குரியன் விமானநிலையத்தில் இருந்து 235 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு விமானம் டெல்லி வந்தடைந்தது. டெல்லி விமானநிலையம் வந்தடைந்த இந்தியர்களை ஒன்றிய அமைச்சர் ராஜ்குமார் ராஜன்சிங் நேரில் சென்று வரவேற்றார். இதன் மூலம் இஸ்ரேலில் இருந்து மீட்கப்பட்டோர் எண்ணிக்கை 447 ஆக அதிகரித்துள்ளது. இஸ்ரேலில் சிக்கியுள்ள எஞ்சிய இந்தியர்களை மீட்கும் பணியை ஒன்றிய அரசு துரித்தப்படுத்தியுள்ளது. இதனிடையே டெல்லி வந்த 235 இந்தியர்களில் 28 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களை டெல்லியில் இருந்தபடி சொந்த ஊர் அனுப்பி வைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.