ஜெருசலேம்: காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் கடந்த அக்டோபர் மாதம் போர் தொடுத்தது. சுமார் 10 மாதங்களுக்குமேல் நடந்து வரும் இப்போரை தற்காலிகமாக முடிவுக்கு கொண்டு வரவும், ஹமாஸ் அமைப்பினர் பணயக்கைதிகளாக பிடித்துச் சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்ரேல் நாட்டவர்களை திரும்ப ஒப்படைக்கவும் அமெரிக்கா, கத்தார், எகிப்து ஆகிய நாடுகள் மத்தியஸ்தர்களாக இருந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
இதுதொடர்பாக உயர்மட்ட பேச்சுவார்த்தை லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் கடந்த வியாழக்கிழமை தொடங்கி 4 நாட்கள் நடந்தது. இதில், அமெரிக்க சிஐஏ இயக்குநர் வில்லியம் பர்ன்ஸ், இஸ்ரேலின் மொசாட் உளவுத்துறை அமைப்பின் தலைவர் டேவிட் பார்னியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஹமாஸ் பிரதிநிதிகள் நேரடியாக பேச்சுவார்த்தையில் பங்கேற்காவிட்டாலும், எகிப்து, கத்தார் மத்தியஸ்தர்களால் அவர்களிடம் தகவல் பரிமாறப்பட்டது.
இந்த உயர்மட்ட பேச்சுவார்த்தை எந்த முடிவும் எட்டாமல் முடிந்திருப்பதாக நேற்று தகவல் வெளியாகி உள்ளன. இது குறித்து பெயர் தெரிவிக்காத அதிகாரி ஒருவர் அளித்த தகவலில், ‘‘ அனைத்து தரப்பிலும் ஒப்பந்தம் எட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அடுத்த வாரம் அதிகாரிகள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்’’ என்றார்.