எருசலேம்: ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் மகன் திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஈரான் அணுகுண்டு தயாரிப்பில் தீவிரம் காட்டி வந்ததால் அந்நாட்டின் மீது கடந்த 13ம் தேதி இஸ்ரேல் விமான படை தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலில் ஈரானின் நான்கு அணு சக்தி தளங்கள் அழிக்கப்பட்டன. ஈரானின் ராணுவ முகாம்கள் பலத்த சேதமடைந்தன. இந்த தாக்குதலில் அணு விஞ்ஞானிகள், ராணுவ தளபதிகள் கொல்லப்பட்டனர். இதற்கு ஈரான் பதில் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் முக்கிய நகரங்களை குறிவைத்து சக்திவாய்ந்த ஏவுகணைகள், டிரோன்களை வீசி அதிதீவிர தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் இஸ்ரேலில் உள்ள சில குடியிருப்பு பகுதிகள் பலத்த சேதமடைந்தன. 3 பேர் பலியானதாக இஸ்ரேல் தெரிவித்தது.
இதனையடுத்து கடந்த 3 நாட்களாக இரு நாடுகளும் மாறி மாறி ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் ஈரான் தலைநகர் டெக்ரானில் உள்ள உலகின் 2வது மிகப்பெரிய எண்ணெய் சேமிப்பு கிடங்குகள், எண்ணெய் கிணறுகள், எரிபொருள் ஆலைகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் எண்ணெய் கிணறுகள் தீப்பிடித்து எரிந்தன. அதேபோல ஈரானின் ராணுவ முகாம்கள் உட்பட 150 இடங்களை குறிவைத்து இஸ்ரேலின் போர் விமானங்கள், டிரோன்கள் தாக்குதல் நடத்தின. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் நடத்திய வான்வெளி தாக்குதலில் இஸ்ரேலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் பலத்த சேதமடைந்தன. ஈரானும், இஸ்ரேலின் பதிலுக்கு பதில் தாக்குதல் நடத்தி வருவதால் போர் பதற்றம் நீடித்து வருகிறது.
இந்நிலையில், இஸ்ரேல்-ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக இன்று நடைபெற இருந்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் மகன் அவ்னர் நெதன்யாகுவின் திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக அவ்னெர் நெதன்யாகு-அமித் யார்தேனி ஜோடியின் திருமணம் இன்று நடைபெறுவதாக இருந்தது. இந்த சூழலில் இஸ்ரேல் – ஈரான் நாடுகள் 3வது நாளாக தீவிர தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் அங்கு போர் ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது. இஸ்ரேலியர்கள் காசாவில் பணயக்கைதிகளாக உள்ள நிலையில், பிரதமர் கொண்டாட்டத்தில் ஈடுபடுவதா? என விமர்சனங்கள் எழுந்த நிலையில் தள்ளி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.