Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தாக்குதலை விரிவுபடுத்தும் இஸ்ரேல் ஈரானின் மற்றொரு ராணுவ ஜெனரல் பலி: மக்கள் வெளியேற அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தல்

துபாய்: ஈரானின் மற்றொரு ராணுவ ஜெனரல் தாக்குதலில் பலியானதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.அணு ஆயுத ஒப்பந்தத்தை ஈரான் ஏற்க மறுத்த நிலையில் திடீரென ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. கடந்த 5 நாட்களுக்கு முன் ஈரானின் உயர்மட்ட ராணுவ தலைவர்கள், அணு விஞ்ஞானிகள், யுரேனியம் செறிவூட்டல் தளங்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டம் உள்ளிட்டவற்றை குறிவைத்து கடுமையான தாக்குதலை இஸ்ரேல் நடத்தியது.

இதனை தொடர்ந்து பதிலடியாக ஈரானும் தாக்குதலை மேற்கொண்டது. இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டுள்ள நிலையில் மத்தியக்கிழக்கில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் ராணுவம் ஈரான் மீதான தனது தாக்குதலை விரிவுபடுத்தி வருகின்றது. தெஹ்ரான் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வசிக்கும் சுமார் 3,30000 பேர் வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் அழைப்பு விடுத்து இருந்தது.

ஈரானின் வான்பரப்பை முற்றிலும் ஆக்கிரமித்து தாக்குதல் நடத்தப்படுவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஈரானில் 120க்கும் மேற்பட்ட தரையில் இருந்து தாக்கும் ஏவுகணைகளை அழித்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேலும் இஸ்ரேலிய விமானங்களை குறிவைக்க ஈரான் பயன்படுத்திய இரண்டு எப்-14 போர் விமானங்களையும் தாக்கி அழித்ததாக இஸ்ரேல் ராணுவம் குறிப்பிட்டுள்ளது. புரட்சிகர காவல்படையின் உயரடுக்கு பிரிவான குட்ஸ் படைக்கு சொந்தமான தெஹ்ரானில் உள்ள 10 கட்டளை மையங்களை இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்கியதாவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் தாக்குதலில் ஈரானின் மற்றொரு ராணுவ ஜெனரல் தாக்குதலில் பலியானதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. கட்டாம் அல் அன்பியா மத்திய தலைமையகத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட ஜெனரல் அலி ஷட்மானியை கொன்றதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஷட்மானியின் இறப்பை ஈரான் இன்னும் உறுதிபடுத்தவில்லை. ஷட்மானி ஈரானின் ராணுவ புரட்சிகரப் படையில் ஒரு ஜெனரலாக இருந்தார்.

இஸ்ரேலிய தாக்குதல்கள் ஈரானின் அணுசக்தி திட்டத்தை மிக மிக நீண்ட காலத்துக்கு பின்னுக்கு தள்ளிவிட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேல் ஈரானின் பல அணுசக்தி திட்ட தளங்களை குறிவைத்துள்ளது. எனினும் ஈரானின் போர்டோ யுரேனியம் செறிவூட்டல் வசதியை அதனால் அழிக்க முடியவில்லை. இது நிலத்துக்கு அடியில் அமைந்துள்ளது. இதனை அகற்றுவதற்கு இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் குண்டு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

* 110 இந்திய மாணவர்கள் வெளியேற்றம்

இஸ்ரேல் -ஈரான் பதற்றம் காரணமாக தெஹ்ரானில் உள்ள இந்திய மாணவர்கள் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டுள்ளனர். சுமார் 110 இந்திய மாணவர்கள் இந்திய தூதரகம் செய்த ஏற்பாடுகள் மூலமாக ஈரானின் எல்லையை கடந்து அர்மீனீயா சென்றுள்ளனர். இதில் சுமார் 90 பேர் காஷ்மீர் பள்ளத்தாக்கை சேர்ந்தவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

* அனைத்து மக்களுக்கும் அச்சுறுத்தல்

பிரான்சின் ஸ்ட்ராஸ்பர்க்கில் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆற்றிய உரையில் ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா, ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், இந்த போர்க்களத்தில் எல்லைகள் எங்கு முடிவடையும் என்று சொல்ல முடியாது. அது அனைத்து இடங்களிலும் உள்ள மக்களுக்கு அச்சுறுத்தலாகும். ஈரான், இஸ்ரேல், காசாவில் வன்முறையானது அனைத்து இடங்களிலும் உள்ள மக்களுக்கு மிகுந்த அச்சுறுத்தலாக உள்ளது.

* டிரம்ப் எச்சரிக்கை

இஸ்ரேல் தனது தாக்குதலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து பொதுமக்கள் வெளியேறும்படியும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். கனடா உச்சிமாநாட்டில் பங்கேற்ற அதிபர் டிரம்ப் அங்கிருந்து அவசர அவசரமாக வெளியேறினார். வாஷிங்டன் திரும்புவதற்கு முன்னதாக அதிபர் டிரம்ப், ஈரானிடம் அணு ஆயுதம் இருக்க முடியாது. காசாவில் போர் நிறுத்தம் உட்பட மத்திய கிழக்கில் விரோதப் போக்கை குறைக்க வேண்டும். அனைவரும் உடனடியாக தெஹ்ரானை விட்டு வெளியேற வேண்டும் என்று கூறியிருந்தார்.