புதுடெல்லி: இஸ்ரேலில் இருந்து டெல்லிக்கு ‘ஆபரேஷன் அஜய்’ என்ற திட்டத்தின் கீழ் இஸ்ரேலிலிருந்து நான்காவது மீட்பு விமானம் மூலம் 274 இந்தியர்கள் தலைநகர் டெல்லி திரும்பினர். பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாத அமைப்பால் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள இஸ்ரேலில், சுமார் 18,000 இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அவர்களில் இந்தியா திரும்ப விருப்பம் தெரிவித்தவர்களை அழைத்து வர ‘ஆபரேஷன் அஜய்’ என்ற திட்டம் தொடங்கப்பட்டது.
முன்னதாக, ஏர் இந்தியா விமானம் மூலம் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரத்திலிருந்து 212 இந்தியர்கள் நேற்று முன்தினம் இந்தியா திரும்பினர். தொடர்ந்து, இரண்டாவது விமானம் மூலம் இஸ்ரேலிலிருந்து 235 இந்தியர்கள் டெல்லி திரும்பியதாக தெரிவிக்கப்பட்டது. மூன்றாம் மற்றும் நான்காவது விமானங்கள் மூலம் இஸ்ரேலிருந்து 500-க்கும் மேற்பட்ட இந்தியர்களை இந்தியாவுக்கு அழைத்து வர திட்டமிடப்பட்டது.
இதற்காக பஞ்சாப்பின் அமிர்தசரஸிலிருந்து ஸ்பைஸ் ஜெட் விமானமும், டெல்லியிலிருந்து ஏர் இந்தியா விமானமும் டெல் அவிவுக்கு நேற்று புறப்பட்டன. இவ்விரு விமானங்களும் இன்று காலை டெல்லி திரும்பின. அதன்படி 3வது விமானம் மூலம் 197 இந்தியர்களும், நான்காவது விமானம் மூலம் 274 இந்தியர்களும் டெல்லி விமான நிலையம் வந்தடைந்தனர்.
இவர்களையும் சேர்த்து இதுவரை மொத்தம் 918 இந்தியர்கள் இஸ்ரேலில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்று டெல்லி வந்தடைந்த இந்தியர்களை, ஒன்றிய அமைச்சர் வி.கே.சிங் வரவேற்று வாழ்த்து தெரிவித்தார்.