சென்னை: தீவுத்திடலில் வரும் 31ம், செப்டம்பர் 1ம் தேதி நடைபெறும் பார்முலா-4 கார் பந்தயம் போக்குவரத்துக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் நடைபெறும் என்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். சென்னையில் நடைபெற உள்ள பார்முலா-4 கார் பந்தயம் தொடர்பான ஆலோசனைக்கு கூட்டம் நேற்று தலைமை செயலகத்தில் நடந்தது.
இதில் தலைமை செயலாளர் முருகானந்தம், விளையாட்டுத்துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா, தீயணைப்புத்துறை இயக்குநர் ஆபாஷ் குமார், சென்னை போலீஸ் கமிஷனர் அருண், மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், விளையாட்டுத்துறை இயக்குநர் மேகநாத ரெட்டி, மின்பகிர்மானக்கழக தலைவர் ராஜேஷ் லக்கானி, பொதுப்பணித்துறை செயலாளர் மங்கத்ராம் சர்மா, நெடுஞ்சாலைத்துறை செயலாளர் செல்வராஜ், செய்தித்துறை செயலாளர் ராஜாராம், இயக்குநர் வைத்திநாதன், சென்னை போலீஸ் கூடுதல் கமிஷனர்கள் கண்ணன், சுதாகர், உளவுத்துறை இணை கமிஷனர் தர்மராஜன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்திற்கு பிறகு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை தீவுத்திடலில் 31ம் தேதி, செப்.1ம் தேதி நடைபெறும் பார்முலா-4 கார் பந்தயம் குறித்து அனைத்து உயர் அதிகாரிகள், காவல் துறை, போக்குவரத்துறை, தீயணைப்பு துறை உள்ளிட்ட அனைத்து துறையினருடன் இன்று (நேற்று) ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. கார் பந்தயம் நடப்பதற்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 8 ஆயிரம் பேர் பார்க்கும் அளவுக்கு இருக்கை வசதி செய்யப்பட்டிருக்கிறது. சனிக்கிழமை காலையில் ஒரு பகுதியில் பொதுமக்கள் இலவசமாக பார்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சனிக்கிழமை மதியத்திற்கு மேல் தகுதிச்சுற்று கார் பந்தயம் ஆரம்பிக்கும். இரவு 10.30 மணி வரை நடைபெறும். கார் பந்தயம் நடைபெறும்போது, போக்குவரத்துக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.