மும்பை: லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்ததையடுத்து ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் 11வது தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. பிளே ஆப் சுற்றுக்கு 5 அணிகள் முன்னேற, கடைசி இடத்துக்கு ஒடிஷா எப்சி, மும்பை அணிகளுக்கு இடையே போட்டி இருந்தது. ஒடிஷா 24 ஆட்டங்களிலும் விளையாடி 33புள்ளிகளுடன் 6வது இடத்தில் பிளே ஆப் வாய்ப்பில் நீடித்தது. மும்பை இன்னும் ஒரு ஆட்டத்தில் விளையாட வேண்டிய நிலையில் 33 புள்ளிகளுடன் 7வது இடத்தில் இருந்தது. ஆனால் தனது கடைசி லீக் ஆட்டத்தில் பெங்களூர் எப்சியை 0-2 என்ற கணக்கில் மும்பை வீழ்த்தி 36 புள்ளிகளுடன் மும்பை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. அதனால் ஒடிஷாவின் பிளே ஆப் கனவு கலைந்தது. கடந்த ஆண்டு லீக் சுற்றில் 2வது இடம் பிடித்த மும்பை, சாம்பியன் பட்டம் வென்றது.
இந்த முறை பிளே ஆப் சுற்றில் கடைசி இடத்தை பிடித்துள்ளது. முதல் 2 இடங்களை பிடித்துள்ள மோகன் பகான் எஸ்ஜி , எப்சி கோவா அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளன. கூடவே முதல் இடம் பிடித்த மோகன் பகான், தொடர்ந்து 2வது முறையாக லீக் சாம்பியன் கேடயத்தை வென்றது. அத்துடன் 3.5 கோடி ரூபாய் ரொக்கப்பரிசும் பெற்றது. அடுத்து 4 இடங்களை பிடித்துள்ள அணிகளான நார்த் ஈஸ்ட்-மும்பை அணிகள் மோதும் முதல் பிளே ஆப் ஷில்லாங்கிலும், பெங்களூர்-ஜாம்ஷெட்பூர் விளையாடும் 2வது பிளே ஆப் பெங்களூரிலும் நடக்கும். இதில் வெற்றி பெறும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். பிளே ஆப், அரையிறுதி சுற்று ஆட்டங்கள் நடைபெறும் தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும்.