சென்னை: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சென்னையின் எப்சி – மோகன் பகான் எஸ்ஜி அணிகள் மோதும் போட்டி, சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று இரவு நடக்கிறது. நடப்பு சாம்பியனான கொல்கத்தா இதுவரை விளையாடிய 2 ஆட்டங்களிலும் வென்று புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. சென்னை அணி தான் விளையாடிய 2 ஆட்டங்களிலும் தோற்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அதுமட்டுமல்ல… நடப்புத் தொடரில் இன்னும் கோலடிக்காத ஒரே அணியாகவும் சென்னை அணி உள்ளது.
இந்நிலையில், செய்தியாளர்களை நேற்று சந்தித்த சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் ஒவன் கோயல், ‘இப்போது 2 ஆட்டங்களை தான் முடித்துள்ளோம். மொத்தம் 22 ஆட்டங்கள் இருக்கின்றன. அவற்றை நேர்மறையாக எதிர்கொள்வோம். நான் பல ஆண்டுகளாக பயிற்சியாளராக இருக்கிறேன். எதை எப்படி எங்கு சரி செய்ய வேண்டும் என்ற அனுபவம் உள்ளது. எனக்கு இருக்கும் நம்பிக்கை வீரர்களிடமும் உள்ளது. அதனால் மீண்டு வருவோம். வலுவான அணியாக இருக்கும் கொல்கத்தாவை எதிர்கொள்வதற்கான திட்டங்களை வைத்திருக்கிறோம். அதனை செயல்படுத்துவோம் ’ என்றார்.