லக்னோ: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு வேலை பார்த்த உத்தரபிரதேச பல்கலைக்கழக மாணவரை என்ஐஏ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். ஜார்கண்ட் மாநிலம் லோஹர்டகா மாவட்டத்தைச் சேர்ந்த பைசான் அன்சாரி (19) என்பவர், உத்தர பிரதேச மாநிலம் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படித்து வந்தார். அவர் அங்குள்ள வீடு ஒன்றில் வாடகை எடுத்து தங்கியிருந்தார். இந்நிலையில் மாணவர் பைசான் அன்சாரி, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக உளவு தகவல்கள் கிடைத்தன. அதையடுத்து மாணவர் வசித்த வீடுகளை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ், பைசான் அன்சாரியை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.
இதுகுறித்து மேலும் அவர்கள் கூறுகையில், ‘கைது செய்யப்பட்ட மாணவரின் அலிகார் மற்றும் ஜார்கண்டில் உள்ள வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. அவரது வீட்டில் இருந்து மின்னணு சாதனங்கள், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்தியாவில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை ஏற்படுத்துவதற்கும், அதற்கு ஆதரவளிப்போரை ஊக்குவிக்கவும், அதற்காக பல்வேறு சமூக ஊடக தளங்களில் தீவிரவாத பிரசாரத்தை ஊக்குவிப்பது தொடர்பான ஆவணங்களை வைத்திருந்தார். மேலும் சமூக ஊடக தளங்கள் மூலம் தனது கூட்டாளிகள் மற்றும் சில நபர்களுடன் சேர்ந்து குற்றவியல் சதித்திட்டத்தை தீட்டியுள்ளார். இந்த சதி திட்டமானது, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் சார்பாக இந்தியாவில் தாக்குதல்களை நடத்துவது முக்கிய நோக்கமாக இருந்துள்ளது. மேலும் தடை செய்யப்பட்ட அமைப்புகளை வேறொரு பெயரில் இயக்குவது தொடர்பான ஆவணங்களும் சிக்கியுள்ளன’ என்று கூறினர்.