Thursday, March 27, 2025
Home » ஈஷாவில் பிப்.26 ஆம் தேதி மஹாசிவராத்திரி பெருவிழா! உள்துறை அமைச்சர் அமித்ஷா, கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் பங்கேற்பு

ஈஷாவில் பிப்.26 ஆம் தேதி மஹாசிவராத்திரி பெருவிழா! உள்துறை அமைச்சர் அமித்ஷா, கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் பங்கேற்பு

by Mahaprabhu

கோவை: கோவை ஈஷா யோக மையத்தில் மஹாசிவராத்திரி பெருவிழா கொண்டாட்டங்கள் வரும் பிப்.26-ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இவ்விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க உள்ளனர். இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று (22/02/2025) கோவை பிரஸ் கிளப்பில் நடைபெற்றது. இதில் ஈஷா அறக்கட்டளையின் மண்டல ஒருங்கிணைப்பாளர் சுவாமி பாரகா கலந்து கொண்டு பேசினார். அவருடன் ஈஷா தன்னார்வலர் கணேஷ் ரவீந்தரன் மற்றும் சரவணன் ஆகியோர் உடனிருந்தனர். பத்திரிக்கையாளர் சந்திப்பில் சுவாமி பாரகா அவர்கள் பேசுகையில்,”நம் பாரத ஆன்மீக மரபில் மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி நாள் மஹாசிவராத்திரி திருநாளாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் கோள்களின் அமைப்பு இயற்கையாகவே மனிதர்களின் உயிர் சக்தி மேல்நோக்கி எழுவதற்கு உதவும் வகையில் இருக்கின்றது.

இந்த ஆன்மீக சாத்தியத்தை மனிதர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில், நம் கலாச்சாரத்தில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மஹாசிவராத்திரி நாளில் இரவு முழுவதும் விழிப்புணர்வுடன் இருக்கும் வகையில் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஈஷாவில் 31-ஆவது மஹாசிவராத்திரி கொண்டாட்டங்கள் வரும் 26-ஆம் தேதி மிக பிரம்மாண்டமான அளவில் நடைபெற இருக்கிறது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா மற்றும் கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவகுமார் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். ஈஷாவில் மஹாசிவராத்திரி விழா ஆதியோகி முன்பு 26-ஆம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை கொண்டாடப்பட உள்ளது. சத்குரு முன்னிலையில் நடைபெறும் இவ்விழாவில் சக்திவாய்ந்த தியானங்கள், மந்திர உச்சாடனைகள், தலைசிறந்த கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு அம்சங்கள் இடம்பெற உள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் சத்குரு அவர்கள் வழிநடத்தும் நள்ளிரவு தியானத்தில் மட்டும் உச்சரிக்கப்படும் திருவைந்தெழுத்து மஹாமந்திரத்தை இந்தாண்டு விழாவில் பங்கேற்கும் அனைவருக்கும் தீட்சையாக சத்குரு வழங்கவுள்ளார். இதன் மூலம் தீட்சைப் பெறும் அனைவரும் அவரவர் இல்லங்களில் இனி திருவைந்தெழுத்து மத்திரத்தை தினமும் உச்சாடணை செய்ய முடியும். யோகக் கலாச்சாரத்தில் மஹாமந்திரமாக கருதப்படும் திருவைந்தெழுத்து மந்திரம் குறித்து சத்குரு கூறுகையில் “இது அழிக்கும் கடவுளான சிவனின் மந்திரம். அவர் உங்களை அழிப்பதில்லை, மாறாக வாழ்க்கையின் உயர்ந்த சாத்தியங்களுக்கும் உங்களுக்கும் இடையே தடையாக இருப்பவற்றை அழிக்கிறார்.” எனக் கூறியுள்ளார்.

இதனுடன் ‘மிராக்கிள் ஆப் தி மைண்ட்’ எனும் இலவச செயலியை சத்குரு அறிமுகப்படுத்த உள்ளார். தினமும் 7 நிமிடங்கள் சத்குருவின் வழிக்காட்டுதலுடன் மக்கள் தியானம் செய்யும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டு உள்ளது. மேலும் மஹாசிவராத்திரி விழாவிற்கு நேரில் வரும் மக்களின் வசதிக்காக தேவையான பார்கிங், சுத்திகரிக்கப்பட குடிநீர், சுகாதாரமான கழிவறைகள், உடனடி மருத்துவ வசதி உள்ளிட்டவைகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. விழாவிற்கு பல்வேறு நாடுகளில் இருந்து மக்கள் வருகை தரவுள்ளனர், இருப்பினும் தமிழக மக்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் சிறப்பு தனி இருக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் விழாவிற்கு முன்பதிவின்றி நேரடியாக வருகை தரும் மக்கள் இலவசமாக கலந்து கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. விழாவில் கலந்து கொள்ளும் லட்சக்கணக்கான மக்களுக்கு மஹாஅன்னதானம் வழங்கப்பட உள்ளது.

மஹாசிவராத்திரி விழா இந்தியா முழுவதிலும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் 50 இடங்களிலும், கேரளாவில் 25 இடங்களிலும் நேரலை செய்யப்பட உள்ளது. இதனுடன் தமிழ், மலையாளம், ஓடியா, அசாமி, பெங்காலி உள்ளிட்ட 11 இந்திய மொழிகள் மற்றும் அரபிக், இத்தாலி, பிரெஞ்சு, ஜெர்மன் உள்ளிட்ட 11 அயல் மொழிகள் என மொத்தம் 22 மொழிகளில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. மேலும் 150-க்கும் அதிகமான தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களிலும், இந்தியா முழுவதும் 100-க்கும் அதிகமான PVR-INOX திரையரங்குகளிலும், ஜியோ ஹாட்ஸ்டார், ZEE5 ஆகிய OTT தளங்கள் மற்றும் BIG 92.7, ஃபீவர் ஆகிய பண்பலை வானொலிகளிலும் விழா நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

இவ்விழாவில் பங்கேற்கும் கோடிக்கணக்கான மக்கள் இரவு முழுவதும் விழிப்பாக இருக்க உதவும் வகையில் இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல பாடகர் சத்ய பிரகாஷ், கர்நாடகாவை சேர்ந்த பாடகி சுபா ராகவேந்திரா, ‘பாரடாக்ஸ்’ என அழைக்கப்படும் தனிஷ் சிங், மராத்தி இசை சகோதரர்கள் அஜய் – அதுல், குஜராத் நாட்டுப்புற கலைஞர் முக்திதான் காத்வி மற்றும் இந்திய மொழிகளில் ஆன்மீகப் பாடல்களை பாடி சமூக ஊடகங்களில் வைரலான ஜெர்மன் பாடகி கசான்ட்ரா மே ஆகியோர் இசை நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளனர்.” எனக் கூறினார்.

You may also like

Leave a Comment

ten + three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi