உலகம் போற்றும் ஓர் இசைக் கலைஞராக வலம் வந்துகொண்டிருக்கிறார், டெய்லர் ஸ்விஃப்ட். பாடகி, பாடலாசிரியர், பிசினஸ் வுமன், நடிகை என பன்முகங்கொண்ட ஆளுமை இவர். டெய்லரின் இசைத்தட்டுகள் 20 கோடிப் பிரதிகளுக்கு அதிகமாக விற்பனையாகியிருக்கின்றன. ‘ஸ்பாட்டிஃபை’ தளத்தில் அதிகமாக கேட்கப்படும் பாடல்களும் டெய்லருடையதுதான் இசையின் மூலம் வருமானம் ஈட்டி, பில்லியனியர் ஆன முதல் நபரும் இவரே. மட்டுமல்ல, ஒவ்வொரு ஊராகச் சென்று இசைக் கச்சேரி நிகழ்த்தி, அதிக வருமானம் ஈட்டியவரும் டெய்லர்தான்.
தவிர, டெய்லரின் ஏழு ஆல்பங்கள் வெளியான முதல் வாரத்திலேயே 10 லட்சம் இசைத்தட்டுகள் விற்பனையாகி யிருக்கின்றன. இதுபோக ‘100 தலைசிறந்த பாடலாசிரியர்களில் ஒருவர்’, ‘போர்ப்ஸ்’ பத்திரிகையின் ‘உலகின் 100 செல்வாக்கான பெண்களில் ஒருவர்’, ‘டைம்’ பத்திரிகையில் 2023ம் ஆண்டின் ‘பர்சன் ஆஃப் த இயர்’, 14 கிராமி விருதுகள், 40 அமெரிக்கன் இசை விருதுகள், 39 பில்போர்டு இசை விருதுகள், 23 வீடியோ மியூசிக் விருதுகள்… என டெய்லர் ஸ்விஃப்ட்டின் சிறப்புகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.டெய்லர் ஸ்விஃப்ட் பிறந்தது, வளர்ந்தது, உலகின் முன்னணிப் பாடகியாக உயர்ந்தது, கோடிக்கணக்கான ரசிகர்கள், அவரது திருமணம் எல்லாம் தனிக்கதை. விஷயம் இதுவல்ல. இன்று தனது இசை சுற்றுலா மூலமாக உலகப் பொருளாதாரத்தில் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்திவருகிறார் டெய்லர். இதனை ‘ஸ்விஃப்ட்டோனோமிக்ஸ்’ என்று அழைக்கின்றனர்
அதென்ன ஸ்விஃப்ட்டோனோமிக்ஸ்?
கடந்த வருடத்தின் மார்ச் மாதம் ‘த எராஸ் டூர்’ எனும் இசைக் கச்சேரி சுற்றுலாவை ஆரம்பித்தார் டெய்லர். ஆசியா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய ஐந்து கண்டங்களில் உள்ள சிகாகோ, லண்டன், டோக்கியோ, மெல்போர்ன், சிட்னி போன்ற 50 முக்கிய நகரங்களில் 152 ஷோக்களை நடத்துவது‘த எராஸ் டூரின்’ திட்டம்.மார்ச்17, 2023ல் அமெரிக்காவில் உள்ள கிளண்டேலில் ஆரம்பித்த ‘த எராஸ் டூர்’, வருகின்ற டிசம்பர் 8, 2024ல் கனடாவில் உள்ள வான்கூவரில் முடிகிறது. இந்த டூரின்போது டெய்லர் இசைக் கச்சேரி நடத்தும் ஒவ்வொரு நகரமும், அதைச் சுற்றியிருக்கும் பகுதிகளும் பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைகிறது.குறிப்பாக சின்னச் சின்ன வியாபாரிகள் முதல் நட்சத்திர ஹோட்டல்களை நடத்தும் முதலாளிகள் வரை பலரும் அதிக வருமானத்தை ஈட்டுகின்றனர். டெய்லரின் இசைக்கச்சேரியை நேரில் கண்டு களிப்பதற்காக வருகின்ற ரசிகர்கள்தான் இந்த வருமானத்துக்கு முக்கிய காரணமாக இருக்கின்றனர். எராஸ் டூரில் டெய்லரின் கச்சேரியை நேரடியாக காண வருகின்ற ஒவ்வொரு ரசிகரும் குறைந்தபட்சமாக 1.10 லட்ச ரூபாயை செலவு செய்கிறார் என்று ஆய்வறிக்கை சொல்கிறது. இதில் போக்குவரத்துச் செலவு, டிக்கெட் செலவு சேர்க்கப்படவில்லை.இப்படி டெய்லரின் தாக்கத்தினால் ஒரு நகரத்தின் பொருளாதாரம் மேம்படுவதால் இதனை ‘ஸ்விஃப்ட்டோனோமிக்ஸ்’ என்று அழைக்கின்றனர். உதாரணத்துக்கு, ‘எராஸ் டூரின்’ ஒரு பகுதியாக கடந்த வருட ஜூன் மாதத்தில் சிகாகோ நகரில் மூன்று இசைக் கச்சேரிகளை நடத்தினார். ஒவ்வொரு கச்சேரியிலும் குறைந்தபட்சம் 54 ஆயிரம் ரசிகர்கள் கலந்துகொண்டனர். இவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள்.
இசைக்கச்சேரி நடந்த நாட்களில் சிகாகோ மற்றும் அதைச் சுற்றியிருந்த சொகுசு விடுதிகள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு வருமானம் ஈட்டியிருக்கின்றன. அத்துடன் அங்கிருந்த அனைத்து வகையான கடைகளிலும் விற்பனை 30 சதவீதம் அதிகரித்திருக்கின்றது. குறிப்பாக உணவகங்களிலும், துணிக்கடைகளிலும், மது விடுதிகளிலும் விற்பனை எகிறியிருக்கிறது. அமெரிக்காவில் மட்டும் மார்ச் 2023லிருந்து ஆகஸ்ட் 2023 வரை நிகழ்ந்த எராஸ் டூரில் கலந்துகொண்ட ரசிகர்கள் சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாயை செலவிட்டிருக்கின்றனர்.மார்ச் 2024ல் சிங்கப்பூரில் நிகழ்ந்த ‘எராஸ் டூர்’ கச்சேரி மூலமாக சிங்கப்பூரின் உள்நாட்டு உற்பத்தி 2.7 சதவீதம் அதிகரித்துள்ளது. அத்துடன் சிங்கப்பூரில் நடந்த டெய்லரின் கச்சேரியைப் பார்க்க வந்தவர்களில் 50 சதவீதத்தினர் வெளிநாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனங்களும் கணிசமான வருமானத்தை ஈட்டியிருக்கின்றன. இதுபோக டிக்கெட் விற்பனையும் வரலாறு காணாத சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. உதாரணத்துக்கு, சென்ற ஜூலை மாதத்தில் ஜூரிச் நகரில் நடந்த நிகழ்ச்சிக்கான 95 ஆயிரம் டிக்கெட்டுகள் 30 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்திருக்கின்றன. அடுத்து கனடாவின் டொரோண்டா நகரில் நடக்கும் நிகழ்ச்சிக்கான டிக்கெட் வேண்டி 3.1 கோடிப்பேர் பதிவு செய்திருக்கின்றனர். இது கனடா மக்கள் தொகையில் 77 சதவீதமாகும்.
இப்படி ஒவ்வொரு நகரிலும் நடக்கும் இசைக்கச்சேரிக்கான டிக்கெட் வாங்க இணையத்தில் வரிசை காப்பவர்களின் எண்ணிக்கையே லட்சங்களில் இருக்கும். ‘எராஸ் டூரின்’ அடுத்த பகுதியாக வருகின்ற நாட்களில் ஐரோப்பாவில் மட்டும் 50 இசைக்கச்சேரிகளை நடத்துகிறார் டெய்லர். இது ஐரோப்பாவின் பொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஆம்; ஜூன் மாதம் முழுவதும் ஐரோப்பாவின் முக்கிய நகரங்களான லிவர்பூல், லண்டன், டப்ளின், கார்டிப்பில் டெய்லரின் இசைக் கச்சேரி நடந்திருக்கிறது. ஒரு மாதம் முன்பே அங்குள்ள சொகுசு விடுதிகளின் முன்பதிவுகள் தீர்ந்துவிட்டன. அங்கு செல்ல விமான டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்து பலரும் டிக்கெட்டுகள் கிடைக்காமல் அவதியாகியுள்ளனர். இவரது இசைக்கச்சேரிக்கான டிக்கெட்டுகளுக்காக 30 லட்சம் பேர் இணையத்தில் எப்போதுமே வரிசையில் இருக்கிறார்கள். மட்டுமல்ல, எராஸ் டூரில் இதுவரை 60 நிகழ்ச்சிகளை மட்டுமே நிகழ்த்தியிருக்கிறார் டெய்லர். இதன் வசூலே 8 ஆயிரம் கோடியைத் தாண்டிவிட்டது. இன்னும் 92 ஷோக்கள் இருக்கின்றன. இதில் கடைசியாக நடந்த இவரது ஜூலை இசைக் கச்சேரிகளில் ரசிகர்களின் ஆரவரத்தால் கிட்டத்தட்ட அந்த நகரமே ஒரு சின்ன நில அதிர்வை சந்தித்தது போன்ற உணர்வை பெற்றதாக தெரிவித்துள்ளனர்.
– த.சக்திவேல்