Monday, December 9, 2024
Home » எலி தொல்லை தருகிறது. அதை விஷ மருந்து வைத்து சாகடித்தால் அது பாவச் செயலாகுமா?

எலி தொல்லை தருகிறது. அதை விஷ மருந்து வைத்து சாகடித்தால் அது பாவச் செயலாகுமா?

by Lavanya

– இரா.வைரமுத்து, ராயபுரம்.

ஒரு ஜீவராசியைக் கொல்வது என்பது பாவச் செயலே. எலித்தொல்லை உண்டாகாத வண்ணம் நாம்தான் நம் சுற்றுப்புறத்தினைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். அதனை விடுத்து எலி வரும் அளவிற்கு வீட்டினிலும், கடைகளிலும் சாமான்களை அடைத்து வைத்து அதன் பின்பு எலி வருகிறது, தொல்லை தருகிறது என்று அதை விஷம் வைத்துக் கொல்வது என்பது தவறு. இதே விதி கரப்பான் பூச்சி, கொசு உட்பட அனைத்து ஜீவராசிகளுக்கும் பொருந்தும். உலகத்தில் இறைவனால் படைக்கப்பட்ட எந்த ஒரு ஜீவராசியையும் கொல்லும் உரிமை நமக்கு வழங்கப்படவில்லை. அந்தந்த ஜீவராசிகள் அவற்றிற்குரிய இடத்தில் உயிர்வாழ்கின்றன. அந்த ஜீவராசிகள் வசிக்கும் விதமாக நாம் நமது இருப்பிடத்தை அமைத்துக்கொண்டு அவற்றைக் குறை சொல்வது தவறு. விஷமருந்து வைத்து எலியைச் சாகடிப்பது என்பது பாவச் செயலே. அதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

?பூர்ணா புஷ்கலாவுடன் ஐயப்பன் இருக்கும் புகைப்படம் வீட்டில் வைத்து வருடம் முழுவதும் பூஜை செய்து வரலாமா?

– மோகன்ராம், திருநெல்வேலி.
தாராளமாக பூஜை செய்து வரலாம். ஆசார, அனுஷ்டானத்தினை சரிவர கடைபிடிக்க இயலும் எனும் பட்சத்தில் நீங்கள் உங்கள் வீட்டிலேயே பூர்ணாபுஷ்கலா சமேத ஹரிஹரபுத்ர ஸ்வாமியின் படத்தினை வீட்டினில் வைத்து வருடம் முழுவதும் ஆராதனை செய்து வருவதில் எந்தவிதமான தவறும் இல்லை. அதே நேரத்தில், ஐயப்பன் அன்னதானப்ரியன் என்பதால் வாரம் ஒரு முறையாவது தவறாமல் உங்களால் இயன்ற அன்னதானத்தினைச் செய்து வாருங்கள்.
வீட்டினில் செல்வ வளம் பெருகும்.

?கிரக தோஷங்களுக்கு பரிகாரம் செய்துதான் தீர வேண்டுமா?

– அயன்புரம் த. சத்தியநாராயணன்.
பரிகாரம் என்றால் என்ன என்பதை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். இன்றைய சூழலில் அவரவர் ஜாதகங்கள் ஆராயப்பட்டு நவகிரகங்களின் சஞ்சார நிலையை வைத்து பெரும்பாலான பரிகாரங்கள் சொல்லப்படுகின்றன. நவகிரகங்களுக்கு பரிகாரம் செய்வதற்காக அந்தந்த கிரகங்களுக்குரிய திருத்தலங்களை நாடிச் சென்று கொண்டிருக்கிறோம். உண்மையில் அக்காலத்தில் ஆலயங்களை எழுப்பும்போது நவகிரகங்களுக்கு என உருவ வழிபாடோ சந்நதிகளோ அமைக்கப்படவில்லை. கடந்த 200 ஆண்டுகளாகத்தான் சிவாலயங்களில் நவகிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடந்து கொண்டிருக்கிறது.

இறைவன் இட்ட பணிகளைச் செய்யும் பணியாட்களே நவகிரகங்கள், பலன்களை மாற்றும் அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. உதாரணத்திற்குச் சொல்லவேண்டும் என்றால் நியாய அநியாயங்களை அறிந்து தீர்ப்பு வழங்கும் நீதிபதி எம்பெருமான், அந்த தீர்ப்பினுக்கான உரையே நம் ஜாதகம், அதை நிறைவேற்றும் அதிகாரிகள் மற்றும் காவலர்களே நவkiரஹங்கள். ஜனன ஜாதகத்தின்படி அவரவருக்குரிய தசாபுக்தி காலங்களில் அதற்கென விதிக்கப்பட்ட பலன்களை அனுபவித்தே ஆக வேண்டும். பூர்வஜென்ம பாவ புண்ணியத்தின் அடிப்படையில்தான் நமது விதிப்பலன்கள் எழுதப்படுகின்றன. தீயகிரகங்களின் தசாபுக்தியும், சரியில்லாத கிரக நிலையும் நிலவும்போது கெடு பலன்களை அனுபவித்து ஆகவேண்டும் என்பது விதி.

இந்த நிலையில் பிறந்த ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுவாக இருந்துவிட்டால் அம்மனிதன் செய்யும் பரிகாரங்கள் நிச்சயம் பலிக்கும். கெடுபலன்கள் மறைந்து நிச்சயம் நற்பலன்கள் கிடைக்கும். மாறாக பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுவற்று இருந்தால் அவன் அனுபவிக்க வேண்டியதை நிச்சயமாக அனுபவித்தே ஆக வேண்டும். அதிலிருந்து தப்பிக்கும் வழிமுறையைத் தேடக்கூடாது. பலனை அனுபவிப்பதே அவன் செய்யும் பரிகாரம். மாறாக தப்பிக்கும் வழிமுறையாக பரிகாரங்களைத் தேடத் தொடங்கினால் நல்ல தசாபுக்தி காலத்திலும் நற்பலன்களை அனுபவிக்க இயலாது போய்விடும். கெட்ட நேரத்தில் அவன் கெடுபலன்களை அனுபவித்து விட்டானேயாகில் நல்ல தசாபுக்தி நடக்கும் காலத்தில் நற்பலன்களையும் அனுபவிப்பான்.

ஊழ்வினைப் பயனை அனுபவித்துத்தான் ஆகவேண்டும் என்பதையே ஜோதிட சாஸ்திரம் அறிவுறுத்துகிறது. பரிகாரங்கள் செய்வதால் கெடுபலன்கள் உண்டாக்கும் தாக்கத்தினை வேண்டுமானால் குறைத்துக்கொள்ள முடியும். ஆயினும் அதன் அடிப்படைப் பலனை நிச்சயம் அனுபவித்தே ஆகவேண்டும். ஊழ்வினைப் பயன் என்ற கூற்று உண்மை என்பதை உணர வேண்டும். அதே நேரத்தில் முந்தைய ஜென்மத்தைப் பற்றிக் கவலை கொள்ளாது இறைவன் நமக்கு அளித்த வரப்பிரசாதமான இந்த மானுட ஜென்மத்தில் ஒருவருக்கொருவர் துரோகம் இழைக்காமல், தன்னலம் கருதாது வாழ்வோம். நம்மால் இயன்றவரை ஆதரவற்ற நிலையில் இருப்பவர்களுக்கு உதவி செய்வோம்.

ஒரு ஜீவனுக்கு ஒருவேளை வயிறார உணவளித்தாலே அவன் அறியாமல் செய்த பாபம் அகலுகிறது என்கிறது தர்மசாஸ்திரம். மாற்றுத் திறனாளிகளை ஊக்குவிப்போம். இல்லாதவர்களுக்கு இருப்பவர்கள் உதவி செய்வோம். பொருளாதாரரீதியாக மட்டுமல்ல, படிப்பறிவு உள்ளவர்கள் பாமரனுக்கு படிக்கக் கற்றுக் கொடுக்கலாம். அதுவும் ஒருவகையில் பரிகாரமே. பரிகாரம் என்பது செய்த தவறுக்கான பிராயச்சித்தம் அல்ல. விதிப்பயனை மாற்றி அமைக்கும் வழிமுறையும் அல்ல. பரிகாரம் செய்வதால் விதிப்பயனை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் கிடைக்கிறது. மனம் பக்குவம் அடைந்தாலே துன்பம் என்பது காணாமல் போகிறது.

?சந்திரனுக்கு பௌர்ணமி நாள் இருப்பது போல் சூரியக் கடவுளுக்கும் விசேஷ நாள் உள்ளதா?

– நமச்சிவாயன், தாராபுரம்.
சூரியனுக்கு எல்லா நாட்களுமே விசேஷமான நாட்கள்தான். சந்திரன் முழுமையாக ஒளிவீசுவது மாதத்தில் ஒருநாள் மட்டுமே. அதனால் பௌர்ணமியை விசேஷ நாளாகக் கருதுகிறோம். ஆனால், சூரியனுக்கு வளர்பிறை, தேய்பிறை என்பதெல்லாம் கிடையாது என்பதால் எல்லா நாட்களும் விசேஷமான நாட்கள்தான். கிரஹண காலங்களில் மட்டும் சூரிய கிரணங்கள் மறைக்கப்படுவதால் அதற்குரிய சாந்தி பரிகாரங்களைச் செய்கிறோம்.
எல்லா நாட்களிலும் சூரியனை வழிபட இயலாதவர்கள் குறைந்த பட்சம் தமிழ் மாதப் பிறப்பு நாட்களிலாவது வழிபட வேண்டும். ஒவ்வொரு தமிழ்மாதப் பிறப்பு நாளன்றும் ஒவ்வொரு ராசிக்குள் சூரியன் நுழைவார். அதிலும் வழிபட இயலாதவர்கள் உத்தராயண, தக்ஷிணாயண புண்ய காலங்களில் அதாவது தை மாதப் பிறப்பு, ஆடி மாதப் பிறப்பு நாட்களிலாவது வழிபாடு செய்ய வேண்டும். அதிலும் செய்ய இயலாதவர்கள் பொங்கல் பண்டிகை அன்று சூரிய பூஜை செய்து வழிபடலாம். விசேஷமாக வழிபட இயலாவிட்டாலும், தினந்தோறும் காலையில் எழுந்தவுடன் உதய காலத்தில் சூரிய பகவானை தரிசித்து மனதாற வழிபட்டு வந்தாலே போதும். சூரிய வழிபாடு சுறுசுறுப்பைக் கூட்டுவதோடு மனதையும், உடலையும் உற்சாகத்துடன் செயல்பட வைக்கும் என்பதே அனுபவபூர்வமான உண்மை.

அருள்ஜோதி

You may also like

Leave a Comment

5 × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi