ஏ.முனியசாமி, காவாகுளம்.
அமாவாசையன்று உணவகங்களில் சாப்பிடுவது என்பதே சரியல்ல. இதில் சில்வர் தட்டில் சாப்பிட்டால் என்ன, இலையில் சாப்பிட்டால் என்ன? அமாவாசை நாள் அன்று வீட்டில்தான் சமைக்க வேண்டும். சமைத்த உணவினை முன்னோர்களுக்கு படையல் இட்டு வழிபட்ட பின் காக்கைக்கு சாதம் வைத்துவிட்டு அதன் பின்னரே சாப்பிட வேண்டும். வேறுவழியின்றி உணவகங்களில்தான் சாப்பிட்டாக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படும்போது வேறு எந்த விதிகளையும் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.
?அஷ்டபந்தனம் என்றால் என்ன?
ஏ. மூர்த்தி, திருவள்ளூர்.
பந்தனம் என்றால் கட்டுதல் அல்லது இணைத்தல் என்று பொருள். ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்படும் சிலையையும் பீடத்தையும் ஒன்றாக இணைப்பதால் இதனை பந்தனம் என்கிறார்கள். எட்டுவிதமான பொருட்களின் கலவைஆதலால் இது அஷ்டபந்தனம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இது குறித்து பின்வரும் பாடல் அழகாக விளக்குகிறது.
``கொம்பரக்கு சுக்கான்தூள் நற்காவி செம்
பஞ்சு சாதிலிங்கம் தேன்மெழுகு தம்பழுது
நீக்கி எருமை வெண்ணெய் கூட்டி நன்கிடித்து
ஆக்கல் அஷ்டபந்தனம் ஆம்’’.
என்பதே அந்தப் பாடல்.
மேற்கண்ட பாடலில் உள்ள எட்டுப் பொருட்களின் கலவையே இந்த அஷ்டபந்தனம் என்பதாகும். இது எந்த விகிதத்தில் அமைய வேண்டும் என்பதற்கும் தனியாகப்பாடல் உண்டு.
?உண்மையான பக்தி எவ்விதம் இருத்தல் வேண்டும்?
கே. அனந்த நாராயணன்,கன்னியாகுமரி.
இறைவா நீயே துணை என்று இறைவனிடத்தில் முழுமையாக சரணாகதி அடைவதே உண்மையான பக்தி. எந்தச் சூழலிலும் மனம் தளராமல் எல்லாம் இறைவன் செயல் என்று நம்புவதும் ஒவ்வொரு நொடியும் அந்த இறைவன் என்னருகிலேயே இருக்கிறான் என்று நினைப்பதுவுமே உண்மையான பக்தி. ராமபிரான் மீது ஆஞ்சநேய ஸ்வாமி கொண்டிருப்பதை உண்மையான
பக்திக்கு உதாரணமாகச் சொல்லலாம்.
?நாலாயிர திவ்யப்ரபந்தத்தில்குறண்டிப் பண் என்று இருக்கிறது. குறண்டிப் பண் எதைக் கூறுகிறது? அப்படி என்றால் என்ன?
பாரதி சுந்தர், கன்னியாகுமரி.
பண் என்பது இசையோடு தொடர்பு உடையது. ஸ்வரம், லயம் என்று சொல்வார்கள் அல்லவா அதுபோல பண் என்பதும் தமிழிசை சம்பந்தப்பட்டது. ராகம் என்று புரிந்துகொள்ளலாம். தேவாரப் பாடல்களில் மொத்தம் 23 வகையான பண்களை பயன்படுத்தி இருப்பார்கள். அதுபோல திவ்யப்ரபந்தத்தில் மட்டும் காணப்படும் பண்களாக நைவளம்,அந்தாளி, தோடி, கல்வாணம், பியந்தை, குறண்டி, முதிர்ந்த இந்தளம் ஆகியவற்றைச் சொல்வார்கள். இதில் குறண்டிப் பண் என்பது திவ்யப்ரபந்தத்தின்
சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.
?ஐந்தாவது ஆண்குழந்தை பிறந்தால் பஞ்சாய் பறந்திடும் என்கிறார்களே, ஏன்?
பி. கனகராஜ், மதுரை.
முதலில் இந்த காலத்தில் ஒரு பிள்ளை பிறப்பதே அபூர்வமாக உள்ளது. இதில் ஐந்து பிள்ளைகள் என்பதும், அதிலும் ஐந்தாவது ஆண்குழந்தையாகப் பிறப்பது என்பதும் அரிதிலும் அரிதுதானே.
ஐந்தாம் பேறு என்ற பெயரில் ஐந்தாவதாக பிறக்கும் குழந்தை அதிர்ஷ்டசாலி என்றும், குடும்பத்தில் உள்ள வறுமை பஞ்சாய் பறந்திடும் என்றும் சொல்வது கிராமப்புறங்களில் வழக்கமாய் உள்ளது. இதில் ஆண்பெண் பேதம் பார்ப்பதில்லை. இதுபோன்ற கூற்றுக்கள் எல்லாம் கிராமப்புறங்களில் அவரவர் தங்கள் அனுபவத்தின் மூலம் சொன்ன கருத்துக்களே அன்றி, இதற்கு சாஸ்திரத்தில் எந்தவிதமான ஆதாரமும் கிடையாது. இந்த கருத்திற்கு அத்தனை முக்கியத்துவம் தரவேண்டிய அவசியம் இல்லை.
திருக்கோவிலூர் K.B.ஹரிபிரசாத் சர்மா