Friday, July 19, 2024
Home » கோவிஷீல்டு ஆபத்தானதா… உண்மை என்ன?

கோவிஷீல்டு ஆபத்தானதா… உண்மை என்ன?

by Nithya

நன்றி குங்குமம் டாக்டர்

கொரோனா காலத்தை கடந்துவந்து மூன்று ஆண்டுகளான நிலையில், தற்போது கொரோனா தடுப்பூசி குறித்த செய்திகள் மக்களிடையே காட்டுத் தீயாகப் பரவி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, கொரோனா வைரஸின் பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ள மக்களுக்கு போடப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசி பக்கவிளைவை ஏற்படுத்துவதாகக் கூறுவது சர்ச்சையாகியிருக்கிறது. உலகம் முழுவதிலும் உள்ள 175 கோடி மக்கள் கோவிஷீல்டு தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளனர்.

இதனால், மக்களிடையே அச்சம் எழுவது நியாயமே. கோவிஷீல்டு உண்மையில் பாதிப்பை ஏற்படுத்துமா? அதனால் ஆபத்து இருக்கிறதா? இல்லையா? என்பது குறித்து நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் தொற்று நோய் நிபுணரான மருத்துவர் சுப்ரா.கோவிஷீல்டு தடுப்பூசி பாதிப்பை ஏற்படுத்துகிறதா இல்லையா என்பதை தெரிந்து கொள்வதற்கு முன்பு. கோவிஷீல்டு மருந்தைப் பற்றியும் அதன் பூர்வீகத்தையும் தெரிந்துகொள்வோம். 2019 -இல் கொரோனா சீனாவில் தொடங்கியபோது இவ்வளவு தூரம் உலக நாடுகள் அனைத்தையுமே முடக்கிப்போட்டுவிடும் என்று யாரும் நினைக்கவில்லை. இப்படி ஒரு நோய் தொற்றை அதுவரை நாம் கண்டதும் இல்லை. புதிதாக, யாரும் அறிந்திராத ஒரு நோய்த்தொற்று பரவத் தொடங்கியதும், எப்படித் தடுப்பது என்று தெரியாமல், மருத்துவ உலகம் திக்குமுக்காடி நின்றது என்பதுதான் நிசர்சனம்.

கோடிக்கான மக்கள் வாழும் இந்த உலகில், அவ்வளவு பேருக்கும் என்ன தடுப்பு மருந்து கொடுப்பது என நாலாபுறமும் விஞ்ஞானிகள் ஆராயத் தொடங்கினார்கள். அப்படி ஆராயத் தொடங்கியதின் விளைவு பல தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால், அதில் மக்களுக்குப் பெரிய அளவில் பாதிப்பை விளைவிக்காத மருந்துகளுக்கு உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் அளித்தது. அப்படி ஒப்புதல் அளிக்கப்பட்ட தடுப்பு மருந்துகளில் கோவிஷீல்டும் ஒன்று. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து அஸ்ட்ராஜெனிகா என்ற மருந்து தயாரிக்கும் நிறுவனம் கோவிஷீல்டை கண்டுபிடித்து வெளியிட்டிருந்தது.

பொதுவாக, எந்தவொரு புதுத் தடுப்பூசியும் மக்களின் பயன்பாட்டுக்கு வர வேண்டும் என்றால் அதற்குப் பல ஆண்டுகள் தேவைப்படும். ஆனால், கொரோனா நமக்கு அவ்வாறு கால இடைவெளியே தரவில்லை. அதனால், சில மாதங்களுக்குள்ளாகவே, கொரோனா தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தனர். இது எப்படி சாத்தியப்பட்டது என்றால், கொரோனாவுக்காகக் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பு மருந்துகள் எதுவும் புது டெக்னாலஜி கிடையாது. கொரோனா வருவதற்கு பத்து ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, அடினோ வைரஸுக்கான தடுப்பூசி மருந்துகள் நம்மிடையே புழக்கத்தில் இருந்து வருகின்றன. அதாவது, சிம்பான்ஜி அடினோ வைரஸ் என்ற அடித்தளத்தை வைத்துதான் கொரோனாவுக்கான தடுப்பு மருந்துகள் தயாரிக்கப்பட்டன.

அதாவது, 2014-15 ஆம் ஆண்டுகளில் மேற்கு ஆப்பிரிக்காவில் ஜெனிவாவின் கிராமப் புறத்து மக்களிடையே பரவிய ஏபோலா வைரஸ் கிருமிகளின் தடுப்புக்காக இந்த மருந்து கண்டு பிடிக்கப்பட்டிருந்தது. அதனைப் பயன்படுத்தி, அந்த வைரஸ் கிருமியைக் கட்டுப்படுத்தவும் செய்தார்கள். அதன் பின்னர், ப்ளு, சிக்கன்குனியா போன்ற நோய்கள் மக்களைத் தாக்கும்போதும், இந்த அடினோ வைரஸ் தடுப்பூசி அடிப்படையாகக் கொண்டு தயாரித்த தடுப்பூசிகள் மூலம் கட்டுப்படுத்தினார்கள். எனவே, இது தொற்றுநோய்களுக்கு பயன்படுத்தக்கூடிய ஒரு தடுப்பூசி என்று தெரிந்து கொண்டார்கள்.

கொரோனா பரவிய போதும், இதனை அடிப்படையாகக் கொண்டுதான் ஒரு சில மாதங்களிலேயே தடுப்பூசியை உருவாக்கினார்கள். அதில் ஒன்றுதான் கோவிஷீல்டு. இது ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்த மருந்து என்பதாலும், இதில் பக்கவிளைவுகள் அவ்வளவாக இல்லையென்பதாலும், இதனை உடனடியாக புழக்கத்துக்குக் கொண்டுவந்தனர். அதுபோன்று இது பயன்பாட்டுக்கு வந்தபோதும், பெரியளவிலான பாதிப்புகளை யாருக்கும் ஏற்படுத்தவில்லை.

இதில் இன்னொரு விஷயத்தையும் நாம் பார்க்க வேண்டும். இத்தனை ஆண்டுகளில் இவ்வளவு லட்சக்கணக்கான தடுப்பூசிகள் ஒரே நேரத்தில் தேவைப்பட்டதும் கிடையாது. அப்படியொரு தேவை வரும்போது ஒரே ஒரு தடுப்பூசியின் மருந்துகள் மட்டுமே போதுமானதாகவும் இருக்காது. எனவே, கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் -வி போன்ற பல மருந்துகள் வழங்கப்பட்டன. அந்த நேரத்தில் கோடிக்கணக்கான மக்களின் உயிரைக் காப்பாற்ற இந்த தடுப்பூசிகள் தேவைப்பட்டன. அதே சமயம், தடுப்பூசியினால் கொரோனா அல்லாத மரணங்களும் ஏற்பட்டது.

ஒருசிலருக்கு ரத்தம் உறைதல், பிளேட்லெட் குறைதல், மூளை பாதிப்பு, மாரடைப்பு போன்ற பக்க விளைவுகளும் ஏற்பட்டது. இதில், உலக சுகாதார நிறுவனத்தின் கணக்குப்படி லட்சம் பேரில் 120 பேர் மரணமடைந்தனர். மேலும், லட்சம் பேரில் 10 பேர் பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட்டனர். மற்றவர்களுக்கு இந்த மருந்து உயிர் பாதுகாப்பாக இருந்தது.

அந்தவகையில், இந்த கொரோனா தடுப்பூசியின் ஒரு சதவீத ஆபத்தைவிட, நூறு மடங்கு உயிர் காக்கும் தன்மையைதான் நாம் அந்த நேரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. மேலும், நம்மிடையே இதைத் தவிர, உயிர்களைக் காக்கும் வேறு சிறந்த தடுப்பு மருந்துகளும் அப்போது இல்லை. எனவே, அந்த நேரத்திற்கு அது சரியான முடிவாகதான் மருத்துவ உலகில் பார்க்கப்பட்டது. இதை தவறு என்றும் சொல்ல முடியாது. ஏனென்றால், கோவிஷீல்டு தடுப்பூசியின் மூலம் பல்லாயிரம் உயிர்கள் காக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் உண்மை. ஒருவேளை அது இல்லாமல் போயிருந்தால், லட்சக்கணக்கான மக்கள் இறந்து போயிருப்பார்கள். எனவே, நன்மையிலும் சின்ன தீமை இருந்தது உண்மைதான்.

இந்நிலையில், இத்தனை ஆண்டுகள் கழித்து தற்போது கோவிஷீல்டு தடுப்பு மருந்துகளை எடுத்துக் கொண்டவர்களுக்கு பக்கவிளைவுகள் ஏற்படுவதாகச் சொல்லப்பட்ட செய்திகள் இணையத்தில் வைரலாகி, மக்களிடையே ஒரு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து மக்கள் எந்தவித அச்சமும் கொள்ள தேவையில்லை. ஏனென்றால், எந்தவொரு தடுப்பு மருந்துமே, ஒன்று முதல் ஆறு வாரத்திற்குள்ளாகதான் அதன் பக்கவிளைவுகளைக் காண்பிக்கும்.

ஆறு வாரங்களைத் தாண்டிவிட்டால், பாதிப்புகள் ஏதும் இருக்காது. அது போன்று, கோவிட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு லாங் கோவிட் என்ற ஒரு பிரச்னை இருப்பது எல்லாருக்குமே தெரியும்., இதயப் பிரச்னை, மாரடைப்பு அதிகம் என்பதும் நமக்குத் தெரியும். ஆனால், அதிர்ஷ்டவசமாக, இந்த தடுப்பூசிகள் போட்டவர்களுக்கு இதுபோன்ற பிரச்னைகள் மிகவும் குறைவு. அதாவது, தடுப்பூசியினால் பாதிப்பு ஏற்பட வேண்டுமென்றால் அது ஆறு வாரத்திற்குள்தான் நிகழ்ந்திருக்கும்.

இனி பாதிப்பு எதுவும் இருக்காது. மேலும், தடுப்பூசி போட்டவர்களுக்கு இதன் பாதுகாப்பு நன்மைகள் பல வருடங்களுக்கு தொடரும் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். இதனால், அவர்களின் இதயத்துக்குப் பாதுகாப்புதானே தவிர ஆபத்து கிடையாது. எனவே, கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்ட மக்கள் யாரும் பயப்பட வேண்டியதில்லை.

ஆனால், சமீபமாக இந்த செய்தி ஏன் வைரலாகி வருகிறது என்றால், இதுவும் புதிய செய்தி கிடையாது. பழைய செய்திதான். அதாவது, கொரோனா காலத்தில் தடுப்பூசியால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து நாட்டை சார்ந்த ஒரு சிலர் அஸ்ட்ராஜெனிகா நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்திருந்தார்கள். அந்த வழக்கின் விசாரணை சமீபத்தில் வந்தபோது, அஸ்ட்ராஜெனிகா நிறுவனம் தங்களது மருத்துவ ரீதியான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்பித்தனர். அதில், கோவிஷீல்டு தடுப்பூசி அரிதான சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என அந்நிறுவனம் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. ஆனால், இந்த பக்கவிளைவுகள் ஆறு வாரத்திற்குள்ளாகதான் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

அதனை சிலர் தவறாகப் புரிந்து கொண்டு, இணையத்தில் பதிவிட, அது வைரலாகிவிட்டது. மேலும், நடந்து முடிந்த ஒரு விஷயத்தை மீண்டும் வைரலாக்கி மக்களிடையே அச்சத்தை மட்டுமே ஏற்படுத்துகின்றனர். இதில் உண்மை இல்லை. இதனால், பலர் பலனடைந்து வருகின்றனர் என்பதுதான் உண்மை. இப்போது, அஸ்ட்ராஜெனிகா நிறுவனம் இந்த கோவிஷீல்டு மருந்தைத் திரும்ப எடுத்துக் கொள்வதாக அறிவித்திருக்கிறதே அது ஏன் என்ற சந்தேகம் எழலாம்.

இந்த அறிவிப்பினால், ஏதேனும் பிரச்னை இருக்குமோ என்ற பயம் வரலாம். அப்படியெல்லாம் எதுவும் இல்லை. தற்போது, அஸ்ட்ராஜெனிகா நிறுவனம், மருந்தைத் திரும்ப பெறுவதாக அறிவித்திருப்பதும் தவறில்லை. ஏனென்றால், இப்போது நமக்கு கோவிஷீல்டு தடுப்பூசியின் தேவை இல்லை. மேலும், எந்தவொரு தடுப்பூசியும் குறிப்பிட்ட காலம் வரைதான் அதன் தேவை இருக்கும். பின்னர், நாளடைவில் அதன் தேவை குறைந்துவிடும். அந்தவகையில், தற்போது கோவிஷீல்டை காட்டிலும் பல சிறந்த தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இனி கோவிஷீல்டு தேவைப்படாது என்ற நோக்கத்தில் கூட அவர்கள் அதைத் திரும்ப பெற்றிருக்கலாம். அதனால், இது குறித்து நாம் பயப்பட தேவையில்லை. மேலும், அறிவியல் வளர வளர புதுப் புது கண்டுபிடிப்புகளும் வந்துகொண்டேதான் இருக்கும். உதாரணமாக, காய்ச்சலுக்கோ, உயர் ரத்த அழுத்தத்துக்கோ அந்தக் காலத்தில் நாம் பயன்படுத்திய மாத்திரைகள் தற்போது இல்லை. அதைவிட, சிறந்த மருந்துகள் தற்போது வந்து விட்டதால், அதுதான் புழக்கத்தில் இருக்கிறது.

அதுபோன்றுதான், தடுப்பூசிகளும் ஒவ்வொரு காலகட்டத்துக்கும் அந்த காலகட்டத்துக்கு ஏற்றவாறு மாறிக் கொண்டேதான் இருக்கும். மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும். எனவே, அது குறித்த பயம் நமக்கு தேவையில்லை.

தொகுப்பு: ஸ்ரீதேவிகுமரேசன்

You may also like

Leave a Comment

1 × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi