Sunday, September 8, 2024
Home » கொழுப்புக் கட்டி ஆபத்தானதா?

கொழுப்புக் கட்டி ஆபத்தானதா?

by Nithya

நன்றி குங்குமம் டாக்டர்

நாம் கேள்விப்படாத, நம்மால் புரிந்து கொள்ள முடியாத அளவில் பல வகையான நோய்கள் அவ்வப்போது பலருக்கும் ஏற்படுவதுண்டு. அந்தவகையைச் சேர்ந்ததுதான் லிபோமா என்று அழைக்கப்படும் கொழுப்புக்கட்டி நோயும். இது உடலில் கை, கால், தோள்பட்டை, முதுகுப்பகுதி போன்ற இடங்களில் வலியில்லாத ஒன்று அல்லது பத்து, இருபது கட்டிகளாகவோ சிறிய அளவில் உருவாகும். இந்த கொழுப்புக்கட்டிகள் ஏன் உருவாகிறது. இது என்னவிதமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பது குறித்து பொது நல மருத்துவர், அமிழ்தன் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

கொழுப்புக்கட்டி என்றால் என்ன கொழுப்பு செல்கள் அதிகமாக வளர்ந்து ஒரு கட்டி போல் திரண்டுவிடுவதுதான் கொழுப்பு கட்டி. இது பொதுவாக, தோலுக்கும் தசைக்கும் இடையில் வளரும்; மிக மிக மெதுவாகவே வளரும்; மென்மையாகவும் உருண்டையாகவும் இருக்கும்; கையால் தொட்டால் நகரக்கூடியதாகவும் இருக்கும். அதிகமாக அழுத்தினாலும் வலி இருக்காது. உடலில் எங்கு வேண்டுமானாலும் கொழுப்புக் கட்டிகள் தோன்றலாம்.

எனினும் கழுத்து, முதுகு, வயிறு, தொடைகள், கைகள், தோள்கள் ஆகிய இடங்களில் இவை அதிகம் ஏற்படுகின்றன. ஒருவருக்கு ஒரு கட்டி மட்டும் வளரலாம் அல்லது ஒரே சமயத்தில் பல கட்டிகளும் வளரலாம். கொழுப்புக் கட்டி வளர்வதற்கான சரியான, தெளிவான காரணம் இன்றுவரை உறுதிப்படவில்லை. என்றாலும் இது ஒரு பரம்பரை நோயாக பார்க்கப்படுகிறது. உதாரணமாக தாத்தாவுக்கோ, அப்பாவுக்கோ இருந்தால் மகனுக்கும் வர வாய்ப்புள்ளது. மற்றபடி யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். அதிகக் கொழுப்புள்ள உணவை சாப்பிடுவது, உடல் பருமன், சர்க்கரை நோய், மது அருந்துதல் போன்றவற்றினால் இக்கட்டிகள் வளர்ச்சியை தூண்டுகின்றன என்று ஆய்வுகள் கூறுகிறது.

கொழுப்புக்கட்டியால் ஏற்படும் பாதிப்பு என்ன…

கொழுப்புக் கட்டியினால் பெரியளவில் பாதிப்பு இருக்காது. சிலருக்கு உடலில் 10, 20லிருந்து 100 வரை கூட சிறு சிறு கட்டிகளாக திரண்டு இருக்கும். இந்தக் கட்டிகள் சிறியளவிலேயே இருந்தால் எந்த பாதிப்பும் இல்லை. அதுவே சற்று பெரிதாக வளர்ந்தால் அல்லது நரம்பு பக்கத்தில் வளர்கிறது என்றால் அது நரம்பை அழுத்தும்போது வலி ஏற்படும். அப்படி வலி ஏற்படும் கட்டிகளுக்குதான் சிகிச்சை தேவை. வலியில்லாத கட்டிகளுக்கு பயம் தேவையில்லை.

அதுபோன்று கொழுப்புக்கட்டி ஒருபோதும் சீழ்க்கட்டிகளாக ஆகாது. அதேமாதிரி கொழுப்புக்கட்டி கேன்சர் கட்டிகளாகவும் மாறாது. அதனால் பயப்படத் தேவையில்லை. அதே சமயம், கட்டி திடீரென வேகமாக வளர்கிறது, அதன் வடிவம் மாறுகிறது, வலிக்கிறது, கட்டியின் மேல் பகுதி சருமத்தின் நிறம் மாறுகிறது, கட்டி உடலுக்குள் ஊடுருவிச் செல்கிறது, கட்டிக்கு அருகில் உள்ள பகுதியில் நெறி கட்டுகிறது என்பது போன்ற அறிகுறிகள் தோன்றினால், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். அது புற்றுநோய்க் கட்டியா, இல்லையா எனப் பரிசோதித்துத் தெரிந்து, அதற்கேற்பச் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.

சில நேரம் முதுகு தண்டுவடத்தில் இந்தக் கொழுப்புக்கட்டி வளரும். அப்படி வளர்ந்தால், அது காலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, முதுகு தண்டுவடத்தில் வளரும் கட்டிகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிவிடுவது நல்லது. சில நேரம் சதைப்பகுதிக்குள்ளே கொழுப்புக்கட்டி வளரும். அந்த கட்டிகள் மிகுந்த வலியைக் கொடுக்கும். அந்த மாதிரி கட்டிகளையும் அறுவைசிகிச்சை மூலம் அகற்றிவிடலாம்.

கொழுப்புக்கட்டியில் எத்தனை வகை இருக்கிறது

கொழுப்புக்கட்டியில் பொதுவாக இரண்டு வகை இருக்கிறது. ஒன்று கேப்ஸூலேட்டட் லிபோமா (encapsulated lipoma) மற்றொன்று டிப்யூஸ் லிபோமா (diffuse lipoma).
கேப்ஸூலேட்டட் லிபோமா என்பது கொழுப்புக்கட்டியை சுற்றி ஒரு பை போன்று இருக்கும். தொட்டுப்பார்த்தால் உருளையாக இருக்கும்.

டிப்யூஸ் லிபோமா என்பது தொட்டுப்பார்த்தால் ரொம்ப பெரிதாக இருக்கும். அதைச்சுற்றி உள்ள முனைகள் அளவிட முடியாமல் பரவி இருப்பது போன்று தோன்றும்.
இதில் கொழுப்புக்கட்டி எங்கே வருகிறது என்பதைப் பொருத்து அதன் வகைகள் இருக்கும். ஒருவருக்கு தோலுக்கு கொஞ்சம் கீழே இருந்தால், சப்க்யூடினியஸ் லிபோமா (subcutaneous lipoma) என்று சொல்லுவோம்.

அல்லது சதைப்பகுதியில் இருந்தால், இன்ட்ரா மஸ்குலர் லிபோமா (intra muscular lipoma) என்று சொல்லுவோம்.சில, ஸ்பைனல் கார்ட்ல இருக்கும். அதை இன்ட்ரா ஸ்பைனல் லிபோமா (intra spinal lipoma) என்று சொல்லுவோம். சில கொழுப்புக்கட்டிகள் மூளையில் கூட உருவாகும். இதுபோன்று நிறைய வகையான கொழுப்புக்கட்டிகள் இருக்கிறது.

மூளைக் கொழுப்புக்கட்டி ஆபத்தை ஏற்படுத்துமா?

மூளையில் கொழுப்புக்கட்டி வந்தால் அது சற்று ஆபத்துதான். உடனே கண்டுபிடித்து அறுவை சிகிச்சை மூலம் நீக்கிவிடுவது மிகவும் நல்லது. அல்லது அது நாளடையில் உடலில் சோர்வை ஏற்படுத்தி பலவீனமாக்கிவிடுவதுடன் பல பிரச்னைகளையும் தோற்றுவிக்கும். கொழுப்புக்கட்டியின் அறிகுறிகள் என்னென்ன.. இது யாருக்கெல்லாம் வரும்.கொழுப்புக்கட்டி யாருக்கு வேண்டுமானாலும் வரும்.

ஆரம்பத்தில் சொன்னது போல இது ஒரு மரபணுநோய் என்றுதான் சொல்ல வேண்டும். தாத்தா, அப்பாவுக்கு இருந்தால் மகனுக்கு 100 சதவீதம் வர வாய்ப்புள்ளது. மற்றபடி யாருக்கும் வரலாம். சுமார் 15 – 20 வயதில்தான் இந்த கொழுப்புக்கட்டிகள் வரத் தொடங்கும். சில கட்டிகள் மெல்ல வளரும். சில கட்டிகள் வளராமல் அப்படியே இருக்கும். இது எந்த வகையான கட்டி என்பதை ஆராய்ந்து சிகிச்சை தேவையென்றால் எடுத்துக் கொள்ள வேண்டும்.

மற்றபடி இந்தக் கொழுப்புக்கட்டிகள் வருவதற்கான காரணங்கள் கண்டறிய நிறைய ஆய்வுகள் இருக்கின்றன. பிரிசர்வேட்டிவ் அதிகமுள்ள உணவு, பேக்கிங் உணவுகளை அதிகம் உண்டால் வருகிறது என்று விலங்குகளை(நாய்) வைத்து செய்யப்பட்ட ஆராய்ச்சி தெரிவிக்கிறது. ஆனால் நேரடியாக மனிதர்களை வைத்து எந்த ஆய்வும் இதுவரை செய்ததில்லை.

சிகிச்சை முறை

ஸ்பைனல் கார்ட் அல்லது மூளைக்குள் ஏற்படும் கட்டிகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவது ஒன்றுதான் ஒரே வழி. சிலருக்கு ஒரே இடத்தில் சிறியளவில் நிறைய கட்டிகள் இருக்கும். அவற்றை அறுவைசிகிச்சை செய்தால் தோலில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதற்காகவே, தற்போது ஊசியின் மூலம் நீக்குவதையே கடைப்பிடிக்கப்படுகிறது. லைப்போலைசிஸ் என்ற ஊசியின் மூலம் கொழுப்புக்கட்டிகளை கரைத்துவிட முடியும்.

அதுபோன்று ஒருமுறை சிகிச்சை எடுத்துக் கொண்டால் மீண்டும் அதே இடத்தில் கட்டி வருவதற்கு வாய்ப்பு மிக குறைவு. ஆனால், வேறு இடத்தில் மீண்டும் உருவாகலாம். அதுமாதிரி உடலில் உள்ள கொழுப்புக்கும், கொழுப்புக்கட்டி வருவதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.

உணவுமுறை:ஓமேகா 3 கொழுப்பு அதிகம் உள்ள மீன் எண்ணெய் மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலம் கொழுப்புக்கட்டி கரைவதாக சிலர் கூறுகின்றனர். சிலர், மஞ்சள் சாப்பிட்டு வந்தால் கட்டியின் அளவு சற்று குறைவதாகவும் கூறுகிறார்கள். ஆனால் இவை எதுவும் அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து அறிவிக்கப்படவில்லை. இளம்வயது பெண் பிள்ளைகள் பலருக்கும் அக்குள் பகுதியில் வரும் கட்டிகள் கொழுப்புக் கட்டி வகையைச் சார்ந்தது தானா?

இல்லை. நிறையபேர் இதனை கொழுப்புக்கட்டி என்று தவறுதலாக புரிந்து கொள்கிறார்கள். இது கொழுப்புக்கட்டி இல்லை. முகத்தில் சிறு கட்டிகள் தோன்றினால் பரு என்கிறோம் அல்லவா அதுபோன்றுதான் இதுவும். பரு வகையைச் சார்ந்ததுதான். அக்குள் பகுதியில் வந்தால் ஹிட்ரடெனிடிஸ் சுப்ரேட்டிவா (hidradenitis suppurativa) என்று சொல்கிறோம். அக்குள் பகுதியில் வேக்ஸிங் அல்லது ஷேவ் சரியாக செய்யாமல் இன்பெக்சானானால் இதுபோன்று கட்டிகள் வரும். அதுவே ட்ரீம் செய்து கொண்டால் கட்டிகள் வர வாய்ப்பில்லை. அதுபோன்று அக்குள் பகுதியை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இந்த வகை கட்டிகளும் சிறிதாக இருக்கும்போதே சிகிச்சை எடுத்துக் கொண்டால், மருந்து மூலம் கரைத்துவிடலாம். அதுவே வளர்ந்து விட்டால் அறுவைசிகிச்சை மூலம்தான் அகற்ற முடியும்.

You may also like

Leave a Comment

4 × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi