நன்றி குங்குமம் தோழி
பெண்கள் கருவுறாமல் இருப்பதற்கான பொதுவான காரணங்களில் ஒன்று பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS) என்ற பிரச்னை. இந்தப் பாதிப்பு பத்தில் ஒருவருக்கு ஏற்படுவதாக கூறுகிறார் ஃபெர்ட்டிலிட்டி ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் ஹேமா வைத்தியநாதன். இதனால் பெண்கள் கருவுறுதல் பிரச்னையினை சந்திக்கிறார்கள். இந்தப் பிரச்னைக்கு மருத்துவ ரீதியாக பல சிகிச்சை முறைகள் இருந்தாலும், அதில் இன்றைய காலக்கட்டத்தில் பலர் நவீன மருத்துவ முறையான கருமுட்டை உறைவித்தலை தேர்ந்தெடுக்கிறார்கள். PCOS உள்ள பெண்களுக்குப் பெரும்பாலும் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிகள், ஹார்மோன் சமநிலையின்மை, முகப்பரு, முகம் மற்றும் உடலில் அதிக அளவில் முடி வளர்ச்சி ஆகியவை காணப்படும்.
இதனால் பெண்கள் இயற்கை முறையில் கருத்தரிப்பதில் பாதிப்பு ஏற்படுகிறது. உணவுமுறை மாற்றங்கள், மருந்துகள், உடற்பயிற்சி போன்றவை அவர்களின் உடல் நிலையை மேம்படுத்த உதவுகின்றன. இருந்தாலும் தங்களுக்கு PCOS பிரச்னை இருப்பதை கண்டறிந்த பல பெண்களுக்கு அது நிரந்தர தீர்வு அளிப்பதில்லை. அவர்களுக்கு கருமுட்டை உறைவித்தல் என்ற நுட்பம் ஒரு முக்கிய பங்கினை ஆற்ற முடியும்.
PCOS கோளாறுள்ள பெண்களுக்கு இருக்கும் ஒரு ஆறுதலான விஷயம், அவர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான ஆரோக்கியமான முட்டைகள் இருப்பதுதான். இயற்கையாகவே அனைத்துப் பெண்களுக்கும் கருமுட்டைகளின் தரத்திலும் அளவிலும் சரிவு ஏற்பட வயது ஒரு காரணமாக இருந்தாலும் கருவுறுதலைப் பாதுகாப்பதற்கு கருமுட்டைகளை முன்கூட்டியே உறைய வைத்து சேமித்துக் கொள்ள முடியும். முட்டைகள் அதிக அளவிலும் சிறந்த தரத்திலும் இருக்கும் நேரத்தில் அவற்றை உறைய வைப்பதன் மூலம் PCOS உள்ள பெண்கள் தாங்கள் தாய்மை அடைய விருப்பப்படும் வயதை அவர்களே தேர்ந்தெடுக்க முடியும். மேலும், வயது முதிர்வால், கருமுட்டைகளின் தரம் குறையும். அந்த நேரத்தில் கருவுறுவதில் தாமதம் ஏற்படும். அதற்கு கருமுட்டை உறைவித்தல் நல்ல தீர்வினை கொடுக்கும்.
முட்டை உறைவித்தலைப் பற்றி சிந்திக்கும் பெண்கள் பெரும்பாலும் அவர்களுடைய வயது, கருப்பையில் இருக்கும் முட்டையின் எண்ணிக்கை ஆகியவற்றைப் பொறுத்து 15 முதல் 30 கருமுட்டைகள் வரை உறைய வைக்கலாம். 37 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு 15 முதல் 20 முட்டைகளை உறைய வைப்பதினால் எதிர்காலத்தில் கர்ப்பமாவதற்கான வாய்ப்பை உறுதியாக வழங்க முடியும். 37 வயதுக்கு மேற்பட்டவர்கள் அல்லது கருப்பையில் இருக்கும் முட்டையின் எண்ணிக்கை குறைவாக இருப்பவர்கள் 20 முதல் 30 முட்டைகளை சேமித்து வைப்பது அவசியம். PCOS நிலை கொண்ட பெண்களுக்கு பொதுவாக அதிக முட்டைகள் இருப்பதால் அவர்கள் இந்த இலக்கை அடைய குறைவான சுழற்சியில் IVF சிகிச்சை செய்தால் போதுமானது.
மருத்துவ துறையில் முட்டை உறைவித்தல் தொழில்நுட்பம் தொடர்ந்து முன்னேறி வருவதால் கருவுறும் திறனைப் பாதுகாக்க விரும்பும் பெண்களுக்கு இது ஒரு நம்பகமான முறையாக மாறியுள்ளது. தேவைப்படும்போது, முட்டைகளைக் கருவூட்ட அவர்களின் துணைவர் அல்லது டோனரின் விந்தணுவைப் பயன்படுத்திக் கொள்ளலாம். PCOS கோளாறுள்ள பெண்கள் தங்களால் கருவுற முடியாது என்ற நிலையினை இந்த மருத்துவ தொழில்நுட்பம் மாற்றி அமைத்துள்ளது. பெண்கள் தாய்மை அடைய ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள உதவும் ஓர் ஆற்றல் வாய்ந்த கருவியே முட்டை உறைவித்தல். சரியான திட்டமிடல் மற்றும் தொடக்ககால நடவடிக்கை மூலம் பெண்கள் தங்கள் கருவுறுதலை திட்டமிடலாம்’’ என்கிறார் டாக்டர் ஹேமா வைத்தியநாதன்.
தொகுப்பு: ரிதி