*துணை சபாநாயகர் தொடங்கி வைத்தார்
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அடுத்த அரடாப்பட்டு கிராமத்தில், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்ட கருத்தரங்கம் நடந்தது.கலெக்டர் தர்ப்பகராஜ் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, இத்திட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:
இந்த கருத்தரங்கில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி விவசாயிகள் வேளாண் பொருட்களை உற்பத்தி செய்ய ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது. மேலும், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும் தான் விவசாயிகள் மேம்பட வேளாண்மைத் துறைக்கென தனியாக சட்டபேரவையில் பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. தமிழகத்தில் கிணற்று நீர் பாசனம் மூலம் நெல் மற்றும் கரும்பு ஆகியவற்றை அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.
நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி குறைந்த அளவில் நீரை பயன்படுத்தி விவசாயம் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில், வேளாண்மை இணை இயக்குநர் கண்ணகி, துணை இயக்குநர் ஷெமிலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.