திருவொற்றியூர்: அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் பாலமுருகன்(35), டிரைலர் லாரி டிரைவர். இவர், நேற்று அதிகாலை சென்னை துறைமுகத்திலிருந்து அதிக எடை கொண்ட இரும்பு தகடு சுருளை லாரியில் ஏற்றிக்கொண்டு மாதவரம் 200 அடி சாலை, சுங்கச்சாவடி அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது முன்னால் சென்ற மற்றொரு டிரைலர் லாரி மீது பாலமுருகன் ஓட்டிச் சென்ற லாரி உரசியது. இதில் நிலைதடுமாறிய லாரி அலை பாய்ந்தது. அப்போது டிரைலர் லாரியின் மீது கட்டப்பட்டிருந்த இரும்பு தகடு சுருள் அவிழ்ந்து பாலமுருகன் அமர்ந்திருந்த லாரி கேபின் மீது மோதியது. இதில், பாலமுருகன் இருக்கையிலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி கேபினுக்குள் சிக்கியிருந்த பாலமுருகனின் உடலை சிரமப்பட்டு மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.