டப்ளின்: அயர்லாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றியது. அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் வென்ற நிலையில் 2 வது போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றது
அயர்லாந்து சென்றுள்ள இந்திய அணி அணி 3 ஆட்டங்களை கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. டப்ளினில் நடந்து வரும் இந்தப் போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்தியா 2 ரன் வித்தியாசத்தில் வென்றது. இதன் காரணமாக தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.
இதையடுத்து 2வது டி20 போட்டி இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி ஆரம்பத்தில் தடுமாறினாலும் ருதுராஜ், சாம்சன், ரிங்கு சிங், ஷிவம் துபே ஆகியோர் அதிரடியால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தது.
இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ருதுராஜ் 58 ரன்களும், சாம்சன் 40 ரன்களும் எடுத்தனர். அயர்லாந்து அணி தரப்பில் மெக்கார்த்தி 2 விக்கெட்டுகளையும் கிரேக் யங் மற்றும் பெஞ்சமின் ஒயிட் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
இதையடுத்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பால் ஸ்டிர்லிங் மற்றும் அடுத்து களமிறங்கிய லோர்கன் டக்கர் ஆகியோர் ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே ரன் எடுத்து எடுக்காமல் வெளியேறினர்.
அடுத்து களமிறங்கிய பேட்ஸ்மேன்களும் பெரிதாக சோபிக்காத காரணத்தால் அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் மட்டுமே எடுத்து 33 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அயர்லாந்து அணி தரப்பில் தொடக்க ஆட்டக்காரராக ஆண்ட்ரூ பால்பிர்னி 72 ரன்களை குவித்தார். இந்திய அணி தரப்பில் கேப்டன் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ரவி பிஸ்னோய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.