டெல்லி : ரயில் டிக்கெட் முன்பதிவு சில நிமிடங்களில் விற்று தீர்வதன் பின்னணியில் உள்ள மோசடி நபர்களை ஐஆர்சிடிசி கண்டறிந்துள்ளது. ரயிலில் பயணம் செய்பவர்கள் தங்களின் டிக்கெட்டை முன்பதிவு செய்வதற்காக IRCTC இணையத்தளத்தை பயன்படுத்துகின்றனர்.ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு 60 நாட்களுக்கு முன்பே தொடங்கினாலும் சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்துவிடுகின்றன. சில நிமிடங்களிலேயே பல லட்சம் டிக்கெட்டுகளை கும்பல் முன்பதிவு செய்துவிடுவதால் பயணிகள் பாதிக்கப்பட்டு வந்தனர். இதையடுத்து கடந்த 5 மாதங்களில் பொது மற்றும் தட்கல் டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு தொடங்கிய 5 நிமிடங்களுக்குள் செய்யப்பட்ட டிக்கெட் வாங்குதல்களை ஐஆர்சிடிசி தொழில்நுட்ப வல்லுநர்கள் பகுப்பாய்வு செய்தனர்.
அப்போது சுமார் 2.9 லட்சம் சந்தேகத்திற்கு இடமான பிஎன்ஆர் எனப்படும் பயணிகள் பெயர் பதிவு விவரங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதையடுத்து ஜனவரி – மே மாதங்களுக்கு இடையே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட சுமார் 2.5 கோடி பயனர் ஐடிக்களை செயல் இழக்க செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 20 லட்சம் பயனாளிகளின் ஐடிக்களை மறுமதிப்பீடு செய்துள்ளதாகவும் கூறியுள்ளனர். டிக்கெட் முன்பதிவு மோசடி தொடர்பாக தேசிய சைபர் குற்றப்பிரிவில் 134 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் 6,800 மின்னஞ்சல்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கு சுமூகமான டிக்கெட் முன்பதிவு செயல்முறையை உறுதி செய்யும் வகையில், அதிநவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஐஆர்சிடிசி கூறியுள்ளது.