*விரைந்து முடிக்க அமைச்சர் சேகர்பாபு உத்தரவு
நாகர்கோவில் : இரணியல் அரண்மனை ரூ.4.85 கோடியில் புதுப்பிக்கும் பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டார்.
இரணியல் பகுதியில் அமைந்துள்ள தொன்மை வாய்ந்த அரண்மனையை ரூ.4.85 கோடி மதிப்பில் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிகளை தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கலெக்டர் அழகுமீனா, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பணிகளை விரைந்து முடித்திட அமைச்சர் சேகர்பாபு துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து பத்மநாபபுரம் நீலகண்டசுவாமி கோயிலில் அரசு நிதியின் கீழ் ரூ.1.29 கோடி மதிப்பில் திருக்கோயில் பழுது பார்த்து புதுப்பித்தல் திருப்பணியும், திருக்கோயில் நிதியின் கீழ் ரூ.44 லட்சம் மதிப்பில் திருக்கோயில் ஐந்து நிலை ராஜகோபுரம் புனரமைத்தல் பணியும், ரூ.20 லட்சம் மதிப்பில் திருக்கோயில் மின் இணைப்பு பணிகளும் என மொத்தம் 3 பணிகளை ரூ.1.93 கோடியில் அமைச்சர் தொடங்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் சேகர்பாபு, சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் ரூ.1.29 கோடி மதிப்பில் கருங்கல் தளம் அமைக்கும் பணியினை துவக்கி வைத்தார். இக்கோயிலில் தாணுமாலய சுவாமி மற்றும் அனுமன் சன்னதிகள் மிக முக்கியமானவை.
கோயிலில் அரசு நிதியின் கீழ் ரூ.58 லட்சம் மதிப்பில் திருக்கோவில் மண்டபம் ஒழுக்கு மாற்றி தட்டோடு பதித்தல் பணியும், உபயதாரர் நிதியின் கீழ் ரூ.14.95 லட்சம் மதிப்பில் திருக்கோயில் ஏழுநிலை ராஜகோபுரம் புனரமைத்தல் பணியும் முடிவுற்றுள்ளது.
மேலும் அரசு நிதியின் கீழ் ரூ.45.80 லட்சம் மதிப்பில் திருக்கோயில் கருங்கல் கட்டமைப்புகளை நீரினால் சுத்தம் செய்யும் பணி மற்றும் விமானம் வர்ணம் பூசுதல் பணிகள் நடைபெற்று வருகிறது.
அதனைத்தொடர்ந்து தாணுமாலயன்சுவாமி கோயிலில் அரசு நிதியின் கீழ் ரூ.1.29 கோடி மதிப்பில் திருக்கோயில் கருங்கல் தளம் அமைத்தல் மற்றும் உப சன்னதி பழுது மற்றும் பராமரிப்பு பணிகள் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.
நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு உணவு ஆணையத் தலைவர் சுரேஷ்ராஜன், தாரகை கத்பர்ட் எம்.எல்.ஏ, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா பிரியதர்சினி, என்.பழனிகுமார், உதவி ஆணையர் தங்கம், அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், கண்காணிப்பு பொறியாளர் ராஜ்குமார், துறை அலுவலர்கள், பக்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திருவிதாங்கோடு கோயில் கும்பாபிஷேக விழா
நாகர்கோவில்: இந்துசமய அறநிலையத்துறை கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் திருவிதாங்கோடு மகாதேவர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் கும்பாபிஷேக விழா கடந்த 6ம் தேதி தொடங்கி நேற்று நிறைவு பெற்றது.
முதல் நாளில் கும்பாபிஷேக பூஜைகள் தொடக்க விழா நடந்தது. இரவு பக்தி இன்னிசை நடந்தது. 2ம் நாள் திருவிழா அன்று கும்பாபிஷேக ஹோம பூஜைகள், இரவில் பரத நாட்டிய நடன நிகழ்ச்சி ஆகியன நடந்தது. விழா நாட்களில் தினமும் பூஜைகள், போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடந்தன. இந்தநிலையில் நேற்று காலை 5 மணி முதல் ஹோமங்கள் நடந்தன.
காலை 8 மணி முதல் 9 மணி வரை மகாதேவர் மற்றும் பெருமாள் விமானங்களில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், பத்மநாபபுரம் சப் கலெக்டர் வினய்குமார் மீனா, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் உட்பட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தையொட்டி வாழ்த்தரங்கம், அன்னதானம், மாலையில் திருவிளக்கு பூஜை, இரவு பரிசு வழங்குதல் ஆகியவை நடைபெற்றது.