Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

ஈரானில் அமைதி ஏற்படும் இல்லாவிட்டால் அழிவு ஏற்படும்: டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன்: ஈரானில் அமைதி ஏற்படும் இல்லாவிட்டால் அழிவு ஏற்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானின் அணு ஆயுத தளங்கள், ஏவுகணை மையங்கள் மீது கடந்த 13ம் தேதி ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் இஸ்ரேல் சரமாரியான வான்வழி தாக்குதல் நடத்தியது. ஈரானும் இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்தியது. இரு நாடுகள் இடையே போர் நடந்து வருகிறது.

இதற்கிடையே, இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் போரில் இறங்கியுள்ளது. ஈரானின் 3 அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். தொடர்ந்து மக்களை சந்தித்த அவர் பேசியதாவது; “ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் வெற்றி அடைந்துள்ளது. ஈரான் அமைதி பாதைக்கு திரும்பாவிட்டால் விளைவுகள் மோசமாகும். உலகிலேயே பயங்கரவாதத்தை ஆதரிக்கும் முதல் நாடு ஈரான்தான்.

அந்நாட்டில் மேலும் சில இடங்களை நாங்கள் குறிவைத்துள்ளோம். போரை முடிவுக்கு கொண்டுவர ஈரான் முயலவேண்டும். அமெரிக்க ராணுவத்தினர் ஈரானின் அணு ஆயுத நிலைகள் மீது துல்லியமான தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் இணைந்து திட்டமிட்டு இந்த தாக்குதலை நடத்தியுள்ளோம். ஈரானில் இன்னும் பல இடங்களை குறிவைத்துள்ளோம். இன்று நாங்கள் செய்ததை உலகின் எந்த ராணுவத்தாலும் செய்ய முடியாது.

ஈரான் தாக்குதலால் ஈரான் அடி பணியாவிட்டால் தாக்குதல் மோசமாகும். ஈரானுக்கு இரண்டு வாய்ப்புகளே உள்ளன. ஒன்று அமைதி ஏற்படும் இல்லாவிட்டால் அழிவு ஏற்படும். இஸ்ரேலுக்கு மரணம், அமெரிக்காவிற்கு மரணம் என்று கடந்த 40 ஆண்டுகளாக ஈரான் கூறி வருகிறது ஈரானின் அச்சுறுத்தலை தடுக்க நான் நீண்ட காலத்திற்கு முன்பே முடிவு செய்தேன்” இவ்வாறு அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.