நியூயார்க்: ஈரானின் அணுசக்தி மையங்களை அழிக்கவில்லை என்று அமெரிக்க உளவுத் துறை கூறியுள்ள நிலையில், அதற்கு வெள்ளை மாளிகை மறுப்பு தெரிவித்துள்ளது. இதற்கிடையே இவ்விசயத்தில் மார்தட்டிக் கொள்ளும் டிரம்பின் அறிவிப்பால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஈரான் – இஸ்ரேல் இடையே 12 நாட்கள் நடந்த கடும் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்ப் போர் நிறுத்தத்தை அறிவித்தார். இந்தப் போரில், ஈரானின் சுரங்க அணுசக்தி மையங்களை அமெரிக்கா சக்திவாய்ந்த ‘பங்கர் பஸ்டர்’ குண்டுகள் மூலம் தாக்கியது.
போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இரு நாடுகளுமே தங்களுக்கு வெற்றி கிடைத்ததாக அறிவித்தன. ஈரானின் அணு ஆயுத அச்சுறுத்தலை நீக்கிவிட்டதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறினார். ஈரானோ இது தங்களுக்கு கிடைத்த பெரும் வெற்றி என்றது. இதேவேளையில், அமெரிக்காவின் தாக்குதல் ஈரானின் அணுசக்தித் திட்டத்தை முற்றிலுமாக அழித்துவிட்டதாக அதிபர் டிரம்ப் பெருமையுடன் அறிவித்திருந்தார். ஆனால், அதிபர் டிரம்பின் கூற்றை அவரது சொந்த நாட்டின் உளவுத்துறை அமைப்பே மறுத்துள்ளது. அமெரிக்க பாதுகாப்பு உளவுத்துறை வெளியிட்டுள்ள ஆரம்பகட்ட மதிப்பீட்டு அறிக்கையின்படி, ‘வான்வழித் தாக்குதல்களால் ஈரானின் அணுசக்தித் திட்டம் முழுமையாக அழியவில்லை.
மாறாக, சில மாதங்கள் மட்டுமே பின்னடைவைச் சந்தித்துள்ளது. சுரங்கங்களுக்குள் இருந்த அணுசக்தி மையங்கள் இடிந்து விழவில்லை. அவற்றின் நுழைவாயில்கள் மட்டுமே மூடப்பட்டுள்ளன. செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பு முழுமையாக அழிக்கப்படவில்லை’ என்று அந்த அறிக்கை கூறுகிறது. இந்த உளவுத்துறை அறிக்கை முற்றிலும் தவறு என அதிபரின் வெள்ளை மாளிகை மறுத்துள்ளது. அதிபரின் அறிவிப்புக்கும், உளவுத்துறையின் அறிக்கைக்கும் இடையே உள்ள இந்த முரண்பாடு, தற்போது சர்வதேச அளிவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.