Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நேற்றிரவும் விடிய விடிய தொடர் ஏவுகணைகள், டிரோன்கள் தாக்குதல்; இஸ்ரேல் மீது ஈரான் சரமாரி குண்டுமழை: ஆதரவு தெரிவிக்கும் அமெரிக்காவுக்கு ரஷ்யா, சீனா, வடகொரியா எச்சரிக்கை

மாஸ்கோ: இஸ்ரேல் மீது ஈரான் சரமாரி குண்டுமழை பொழிந்தது. நேற்றிரவும் விடிய விடிய இந்த இந்த தொடர் ஏவுகணைகள், டிரோன்கள் தாக்குதலால் பல பகுதிகள் பலத்த சேதமடைந்தன. இதற்கிடையில் இஸ்ரேலுக்கு ஆதரவுக்கு தெரிவிக்கும் அமெரிக்காவுக்கு ரஷ்யா, சீனா, வடகொரியா உள்ளிட்ட நாடுகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளன. ஈரான் அணுசக்தி திட்டத்தை முடக்கும் நோக்கில் ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் அந்நாட்டின் மீது கடந்த 13ம் தேதி இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில், ஈரானின் நடான்ஸ் உள்ளிட்ட முக்கிய அணு நிலையங்கள் மீது குண்டு வீசப்பட்டுள்ளது. இதில் முக்கிய அணு விஞ்ஞானிகள், ராணுவ தளபதிகள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு பதிலடியாக, ‘ஆபரேஷன் ட்ரூ ப்ராமிஸ்-3’ என்ற பெயரில் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரம் உள்ளிட்ட பகுதிகளில் ஈரானும் ஏவுகணைகளை சரமாரியாக வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த மோதலில் இஸ்ரேலுக்கு மறைமுகமாக அமெரிக்கா உதவி செய்து வரும் நிலையில், ஈரான் உச்ச தலைவர் கமேனி நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்தார். இந்த மிரட்டலை நிராகரித்த காமெனி, ‘ஈரான் ஒருபோதும் யாரிடமும் சரணடையாது என்றும், அமெரிக்கா இந்த விவகாரத்தில் தலையிட்டால் சரிசெய்ய முடியாத இழப்பை சந்திக்கும்’ என பதில் மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இப்போரில் அமெரிக்காவும் களமிறங்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஈரானின் பல ஏவுகணை தடுப்பு அமைப்புகளை அழித்ததால் தலைநகர் தெஹ்ரான் வான் பரப்பை கைப்பற்றியிருப்பதாக கூறியிருக்கும் இஸ்ரேல், தொடர்ந்து தனது போர் விமானங்களை அனுப்பி குண்டுவீசி வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல்-ஈரான் போர் 8வது நாளாக இன்றும் நீடித்தது.

இரு நாடுகளும் மாறி மாறி ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்றிரவு இஸ்ரேல் மீது ஈரான் தொடர் குண்டுமழை பொழிந்தது. இரவு முழுவதும் 1000க்கும் மேற்பட்ட டிரோன்கள், 450 ஏவுகளை தாக்குதல்களை ஈரான் நடத்தியுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் குடியிருப்பு பகுதிகள், மருத்துவமனை சேதமானது. இந்த தாக்குதலில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். மேலும் ஈரான் ராணுவம், இஸ்ரேலின் டெல் அவிவ், ஹைபா ஆகிய இடங்களில் உள்ள ராணுவ தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தின. இஸ்ரேலில் உள்ள நார்வே தூதரின் வீட்டின் மீதும் குண்டுகள் வீசப்பட்டதாக இஸ்ரேலிய வெளியுறவு துறை அமைச்சர் கிடியோன் தெரிவித்தார். இதற்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த குண்டு வீச்சில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதற்கிடையில் ஈரானின் நட்பு நாடுகளான ரஷ்யாவின் அதிபர் புதின் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் நேற்று சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.

தொடர்ந்து, இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவித்த இரு தலைவர்களும், போரை உடனடியாக நிறுத்த வலியுறுத்தினர். இந்நிலையில், ரஷ்ய அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், ஈரான் - இஸ்ரேல் போர் குறித்து செய்தியாளர்களுடன் கூறுகையில், ‘ஈரானை அமெரிக்கா தாக்குவதை தவறான நகர்வு என்று ரஷ்யா எண்ணுகிறது. இது மேலும் போரை தீவிரப்படுத்தும். இத்தகைய மோதல் முழு பிராந்தியத்தையும் தீக்கிரையாக்கும். ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த நினைக்கும் இஸ்ரேல், அமெரிக்கா திட்டத்தை ஏற்று கொள்ள முடியாது. கமேனியை கொன்றால், ஈரானில் பயங்கரவாதம் அதிகரிக்கும் என்பதை அவரை கொல்ல நினைப்பவர்கள் மனதில் வைத்து கொள்ள வேண்டும்’ என்றார். இதனிடையே, வெள்ளை மாளிகை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஈரான் அணு ஆயுதத்தை அடைய கூடாது என்பதில் டிரம்ப் தெளிவாக இருக்கிறார், ஈரானுக்கு எதிராக இஸ்ரேலுடன் போரில் இணைவது குறித்து இன்னும் 2 வாரங்களில் டிரம்ப் முடிவெடுப்பார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் ஈரானுக்கு வட கொரியா ஆதரவு தெரிவித்துள்ளது. மத்திய ஆசியாவில் முழுமையான போரின் அபாயத்தை இஸ்ரேல் அதிகரித்து வருவதாக உயரதிகாரி ஒருவர் தெரிவித்ததாக வட கொரியாவின் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், ‘இன்று உலகம் காணும் நிகழ்வுகள், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளால் ஆதரிக்கப்பட்டு பாதுகாக்கப்படும் இஸ்ரேல், இஸ்ரேல் மத்திய கிழக்கின் அமைதியை பாதித்த புற்றுநோய். ஈரானுக்கு வட கொரியா ஆதரவு என்பதையும், உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பை அழிப்பதில் முக்கிய குற்றவாளி என்பதையும் தெளிவாக நிரூபிக்கிறது. மத்திய ஆசியாவில் ஒரு புதிய போரை கொண்டு வந்த சியோனிஸ்டுகளும், அவர்களை ஆர்வத்துடன் பாதுகாத்து ஆதரிக்கும் பின்கதவு சக்திகளும் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை அழிப்பதற்கு முழு பொறுப்பாவார்கள்’ என்று கூறினார்.

இஸ்ரேலுக்கு எதிரான வடகொரியாவின் அறிக்கை, ஈரானுடனான அதன் நெருங்கிய உறவை பிரதிபலிக்கிறது. ஈரானும் வடகொரியாவும் 1973 முதல் நெருங்கிய உறவை கொண்டுள்ளன. ஈரானை போல வடகொரியாவும் அதன் ஆயுதங்கள் மற்றும் அணுசக்தி திட்டங்கள் காரணமாக அமெரிக்கா மேற்கு நாடுகளால் தொடர்ந்து தடைகளுக்கு இலக்காகி வரும் நாடு என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலில் இருந்து அமெரிக்க தூதரக அதிகாரிகள் வாபஸ்

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்து வருவதால் இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் கூடுதலாக பணியாற்றி வந்த தூதர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை விமானம் மூலம் வெளியேற்ற அமெரிக்க வெளியுறவு துறை நடவடிக்கை எடுத்தது. இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘எத்தனை தூதரக அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் விமானத்தில் கொண்டு செல்லப்பட்டனர் என்பது குறித்த தகவல் இல்லை. அதேபோன்று, தரைவழியாக ஜோர்டான் மற்றும் எகிப்து நாடுகளுக்கு சென்ற அமெரிக்கர்களின் எண்ணிக்கை குறித்தும் தெரியவில்லை.

இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் மைக் ஹக்கபி எக்ஸ் தளத்தில், அமெரிக்க மக்களை வெளியேற்ற விமானம் மற்றும் கப்பல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பதற்கு சற்று முன்னதாகவே அமெரிக்க மீட்பு விமானம் இஸ்ரேலில் தரையிறங்கி விட்டது” என்று தெரிவித்துள்ளன.