எருசலேம்: இஸ்ரேல் மீது 100 டிரோன்களை ஏவி ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. மத்திய கிழக்கில் கடந்த சில ஆண்டுகளாக இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போர் தொடர்ந்து வருகிறது. இந்த சூழலில், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ராணுவ தளவாடங்கள் உற்பத்தி நிலையங்கள், அணுசக்தி நிலையங்கள், ராணுவ அலுவலகங்கள் உள்ளிட்டவை குறித்து ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் இஸ்ரேல் கடும் தாக்குதலை நடத்தியாது. ஈரானின் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் சரமாரி தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலை அடுத்து ஈரான் வான்வெளி மூடப்பட்டது. இதை ஈரான் நாட்டின் அரசு ஊடக நிறுவனமான ஐஆர்என்ஏ உறுதி செய்தது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி முகமது பகேரி கொல்லப்பட்டார். இந்நிலையில் தங்கள் நாட்டின் மீது நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரான் ஏவிய 100 ட்ரோன்களை இடைமறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல், ஈரானின் இந்த நடவடிக்கை மத்திய கிழக்கை மீண்டும் ஒரு போர் போன்ற அச்ச நிலைக்குத் தள்ளுகிறது. இதற்கிடையில் இரு நாட்டு வான்வெளிகளும் மூடப்பட்டுள்ளன. இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.